Tamilnadu

”பெண்களின் முன்னேற்றமே நாட்டின் உண்மையான முன்னேற்றம்” : தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா!

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மகளிர் காவலர் பொன்விழா ஆண்டையொட்டி அகில இந்திய அளவில் மகளிர் காவலர்களுக்கான சிறப்பு துப்பாக்கி சுடும் போட்டி கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. 13 பிரிவில் 30 மாநிலங்களை சேர்ந்த 454 பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியின் நிறைவு விழா இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கினர்.

பின்னர் பேசிய சிவ்தாஸ் மீனா, ”அகில இந்திய எண் காவலர் துப்பாக்கிசுடுதல் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். தமிழ்நாடு அரசு செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா போன்ற போட்டிகளை மிக சிறப்பாக நடத்தியது. தற்போது அகில இந்திய மகளிர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியையும் அரசு சிறப்பாக நடத்தியுள்ளது.

பெண்கள் முன்னேற்றம் தான் நாட்டின் உண்மையான முன்னேற்றம். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உதவித் தொகை, புதுமைப் பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெண்களின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தி வருகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒன்றிய அரசின் திட்டத்தை தவறாக எழுதிய ஒன்றிய பாஜக அமைச்சர்... இணையத்தில் வீடியோ வைரல் !