Tamilnadu

“கிராமத்திலிருந்து இலண்டனுக்கு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றி!” - முரசொலி நாளேடு புகழாரம்!

கிராமத்திலிருந்து இலண்டனுக்கு...

“மாணவ – மாணவியரிடம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்... படியுங்கள். படியுங்கள். படியுங்கள். கல்வி ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. மாணவச் செல்வங்கள், படிப்பதற்கு சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை ஆகும். இலவச பஸ் பாஸ் முதல் காலை உணவுத் திட்டம் வரையில் பல்வேறு சலுகைகளை நாம் வழங்குவது இதனால்தான்.

கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய நமது அரசு உறுதுணையாக இருக்கும். கல்விச் சாலையில் தடங்கல் இன்றி, தயக்கம் இன்றி, அறிவை மூலதனமாகக் கொண்டு மாணவ, மாணவியர் கற்று மென்மேலும் உயர்வை அடைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களது தந்தையாக வாழ்த்துகிறேன்" என்று அண்மையில் நடந்த பள்ளிக் கல்வித் துறை ஐம்பெரும் விழாவில் முதலமைச்சர் குறிப்பிட்டார்கள்.

இவை ஏதோ மேடைக்காகச் சொன்ன அலங்காரச் சொற்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கிறார்கள் அந்த 25 மாணவ மாணவியர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இலண்டன் சென்று திரும்பி இருக்கிறார்கள். இவர்களை அழைத்துச் சென்றது தமிழ்நாடு அரசு.

வசதி படைத்தவர் வீட்டுப் பிள்ளைகளாலோ, அல்லது மிகப்பெரிய நிறுவனங்களின் நன்கொடை மூலமாகவோ யாரோ சிலருக்குச் சாத்தியமாகி வந்ததை அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கும் கிடைக்கும் வகையில் கல்வி எனும் நீரோடையை கிராமத்துக்குள் திருப்பியதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வெற்றியாகும். முதலமைச்சரின் வெற்றியாகும்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டமும் பிரிட்டிஷ் கவுன்சிலும் இணைந்து 25 மாணவ, மாணவியரைத் தேர்வு செய்தார்கள். இவர்களுக்கு இங்கிலாந்தின் டர்ஹம் பல்கலைக்கழகத்தில் பயிற்சி தரப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார்கள்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மனமார நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார்கள். 'நான் முதல்வன்' திட்டமானது கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இதுவரை 20 லட்சம் மாணவர்கள் அந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்றுள்ளார்கள். மாணவர்களின் படிப்பை இது உயர்த்துகிறது.

படித்த மாணவனுக்குத் தன்னம்பிக்கை யையும் அறிவாற்றலையும் ஊட்டுகிறது இந்தத் திட்டம். எத்தனையோ நிறுவனங்கள் தங்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டுள்ளன. அதில் பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒன்று. S.C.O.U.T (Scholars for Outstanding Undergraduate Talent in Tamil Nadu) என்பது இத்திட்டத்தின் பெயராகும். இதன்படி 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் 11 பேர் மாணவர்கள், 14 பேர் மாணவிகள். இவர்களுக்கு மேல் நிலைப் பயிற்சி லண்டனில் தரப்பட்டது. அனைத்துச் செலவுகளையும் அரசும் பிரிட்டிஷ் கவுன்சிலும் ஏற்றுக் கொண்டன.

"முதல் தலைமுறை பட்டதாரி நான்.. எனக்காக செலவு பண்ற அம்மா அப்பா அவங்களுக்காக எதுவும் வாங்கியது இல்லை. ஊட்டியில் தேயிலை விவசாயி மகள் நான்.. பொருளாதாரம் பெருசா கிடையாது. ஊர் ஆயிரம் சொன்னாலும் காடு மலை தாண்டி படிக்க அனுப்புனது என்னோட அப்பாதான். அவரு பஸ் கண்டக்டர். அவருக்குக் கிடைத்த வேலை மூலமாகத்தான் ஓரளவு குடும்பம் நிலையாச்சு..

ஆனா காலத்துக்கும் பஸ் ஓட்டி காசு சேர்த்த அப்பா, நான் முதல் தடவையாக விமானத்துல ஏறிய போது ஆனந்த கண்ணீரோட நின்றார்" என்கிறார் ஒரு மாணவி. "பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த எனக்கு சாதி ரீதியாக பிரிச்சு பேசிய ஊரு முன்னால் இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்கிறேன் என் படிப்போட.." என்கிறார் ஒரு மாணவி.

"அம்மா டைலர். துணி தைத்து வரும் காசுதான் வாழ்வாதாரம். அப்பா கூலி வேலை. அரசுப் பள்ளியில்தான் 12 ஆவது வரைக்கும் படிச்சேன். இன்றைக்கு நானும் இந்த 25 பேரில் லண்டன் சென்று அரசுப் பள்ளி எதுக்கும் குறைஞ்சது இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறேன்" என்கிறார் இன்னொரு மாணவர்.

"பொறியியல் படிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. ஆனால் படிக்க வைக்க வீட்டில் பணமில்லை. அரசுப் பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம் இருந்ததால்தான் நான் கல்லூரியில் சேர்ந்தேன். படித்தேன். அதன்பிறகு கல்லூரியில் எனக்கு ‘நான் முதல்வன்' திட்டம் கிடைத்தது. இப்போது இலண்டன் வரைக்கும் போய் திரும்பி இருக்கிறேன்" என்கிறார் ஒரு மாணவி.

"எனக்கு இனிமேல் பெரிய கம்பெனிகளில் வேலை கிடைக்கும்" என்கிறார் ஒரு மாணவர். "எனக்கு இனிமேல் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து அழைப்பு வரும்" என்கிறார் ஒரு மாணவர். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி சொன்னார்: "நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போதே திருமணமாகி விட்டது. திருமணமாகி விட்டதால் உன்னால் முழுமையாக படிக்க முடியாது, இடையில் படிப்பை நிறுத்திவிடுவாய் என்று சொன்னார்கள்.

'நான் முதல்வன்' திட்டத்தின் மூலமாக இலண்டன் வரை சென்றுவிட்டு இந்த மேடையில் நான் நிற்பது அவர்களின் கேள்விக்கு விடையாக இருக்கும். இந்தளவுக்கு நான் உயரக் காரணமான முதலமைச்சர் அவர்களுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி" என்று உருக்கமாகச் சொன்னார். 'திராவிட மாடல்' ஆட்சியின் இதயம் என்பது 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற நோக்கம் கொண்ட இதுபோன்ற திட்டங்களில்தான் இருக்கிறது.

- முரசொலி தலையங்கம் (20.6.2024)