Tamilnadu

'கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் : ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை !

கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இ்த்திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின. அதன்படி இத்திட்டத்துக்கான தகுதியான பயனாளிகள், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி உதவி பொறியாளர் அல்லது வட்டார பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வார்டு உறுப்பினர், ஊராட்சி மேற்பார்வையாளர் ஆகியோர் அடங்கிய குழு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 2024-25 நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல இந்த திட்டத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஜூலை 5ஆம் தேதிக்குள் பணியாணை வழங்க வேண்டும் என்றும், ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Also Read: மாட்டிறைச்சி வைத்ததாக கூறி கொடூரமாக தாக்கிய கும்பல் : பாலத்தில் இருந்து தூக்கிவீசி கொலை செய்த கொடூரம் !