Tamilnadu

புதுச்சேரி அமைச்சரின் இடத்தில் மீட்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் - தமிழக வனத்துறை அதிரடி!

புதுச்சேரியில் வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 6 டன் சந்தன கட்டைகளை நீதிமன்ற அனுமதியுடன் பறிமுதல் செய்த தமிழக வனத்துறையினர், அந்த நிறுவனத்தை வருவாய் துறை அதிகாரிகள் மூலம் சீல் வைத்தனர்.

கேரளாவில் இருந்து சேலம் வழியாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சேலத்தில் வனத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சந்தன கட்டைகள் கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து 1.50 டன் எடையுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாய்க்கால் பகுதியில் புதுச்சேரி மாநில வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வரும் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சந்தன கட்டைகள் கடத்திக் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேலம் உதவி வன பாதுகாவலர் செல்வக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று சம்பந்தப்பட்ட புதுச்சேரி வில்லியனூர் அருகே உளவாயக்கால் கிராமத்தில் உள்ள அந்த வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக 156 பைகளில் சந்தன கட்டைகள், 53 பைகளில் சந்தன துகள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அதற்குண்டான உரிய ஆவணங்கள் இல்லை. இதன் பின்னர் அந்த நிறுவனத்தை தங்களது கட்டுப்பாட்டில் வனத்துறை அதிகாரிகள் கொண்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அங்கு தமிழக வனத்துறையினர் சோதனையில் நடத்தினர். இதில் பதுக்கி வைக்கப்பட்ட சந்தன துகள்கள், கட்டைகள் 6 டன் எடை கொண்டது எனவும் கணக்கிடப்பட்டது. இதையடுத்து சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தன துகள்கள், கட்டைகளை நீதிமன்றத்தின் அனுமதி பெற்று பறிமுதல் செய்து, அவற்றை சேலம் கொண்டு சென்றனர். மேலும் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

முழுமையான விசாரணைக்கு பிறகே பதுக்கி வைக்கப்பட்ட சந்தன கட்டைகளின் மதிப்பு என்ன? யார் யார் சம்மந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். அதேநேரத்தில் விசாரணை முடிந்த பின்னர் இந்த கடத்தலில் பல முக்கிய புள்ளிகள் சிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “அவர் ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை...” - எடியூரப்பா மீதான பாலியல் வழக்கில் கர்நாடக நீதிபதி கருத்தால் ஷாக்!