Tamilnadu

ரூ.455.32 கோடியில் 22931 Smart Class Rooms : ஐம்பெரும் விழாவில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.6.2024) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில், அரசுப் பள்ளிகளில் 455.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகளை தொடங்கி வைத்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்கள், நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 67-வது தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியர்களை பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கி, தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகளையும் வழங்கினார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் இணைய வசதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை அதிகரித்து, தமிழகத்தின் கல்வித் தரத்தினை உயர்த்திட இல்லம் தேடி கல்வி, நம் பள்ளி நம் பெருமை, எண்ணும் எழுத்தும், நம்ம ஸ்கூல் பவுண்டேசன், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு போன்ற சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துதல், பள்ளிகளின் வகுப்பறைக் கட்டடங்கள், குடிநீர் வசதி, கழிவறைகள், மின்சாதன வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், திறன் வகுப்பறைகள் அமைத்தல், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அரசுப் பள்ளிகளில் 455.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், இடைநிற்றலின்றி கல்வி பெறுவதை உறுதி செய்யவும், உயர் கல்வி பயிலவும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கு வழிகாட்டவும் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களை வகுத்து பள்ளிக் கல்வித் துறை வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற சூழலை வழங்குவதற்கு பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பங்களிப்பு ஆகியவற்றினை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 455.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Class Rooms) உருவாக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒரு வகுப்பறை, குழந்தைகள் ஆர்வமுடன் கற்கும் வண்ணம் வண்ணமிகு வகுப்பறையாக மாற்றப்பட்டு, அவ்வகுப்பறையில் திறன் பலகை (Smart Board) பொறுத்தப்பட்டு,

திறன்மிகு வகுப்பறை செயல்பாட்டிற்காக இணைய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நேரடியாக வகுப்பறையில் கற்பிக்கும் போது, சில பாடப்பகுதிகள் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ள இயலா நிலை உருவாகலாம்.

அச்சமயங்களில் படங்கள், காணொளி (Video) ஆகியவற்றினை இத்திறன் பலகையினைப் பயன்படுத்தி விளக்கும்போது மாணவர்களின் புரிதலை எளிமையாக்கும். மாணவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த கற்றல் வளங்களை மீளப் பயன்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும். திறன் பலகையானது இணைய வசதியுடன் அமைக்கப்படுவதால் மாணவர்கள் எந்தப் பாடத்தைக் கற்கும் போதும் அதனுடன் தொடர்புடைய சமீபத்திய நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் இயலும். மேலும், இத்திறன் பலகைகள் தொடுதிரையாகவும் செயல்படுவதால் மாணவர்களே இதனைத் தொட்டு தகவல்களைப் பெறத்தக்க வகையில் உள்ளது தனிச்சிறப்பாகும்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள்

2024ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவ, மாணவியர்கள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ, மாணவியர்கள், என மொத்தம் 43 மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்ப் பாடத்தை ஆர்வமுடன் பயின்று நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதைப் பாராட்டி, தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்

தமிழ்நாடு முழுவதிலும், இந்த ஆண்டு நடைபெற்ற அரசுப் பொதுத் தேர்வுகளில் 12-ஆம் வகுப்பில் 94.56 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுப் புதிய சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 386 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அதேபோல 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் 91.55 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளனர். இதில், அரசுப் பள்ளிகளில் மட்டும் 87.90 சதவிகித மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள 1342 அரசு உயர்நிலைப் பள்ளிகள் இந்த ஆண்டில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆக மொத்தம் 1728 பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் இவ்வாண்டில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

2023-2024ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் தங்களது பள்ளி நூறு சதவிகிதம் தேர்ச்சியடைய அர்ப்பணிப்புடன் பணியாற்றிய 1728 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

67-வது தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்

கடந்த ஆண்டு குறுவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்கள் இந்திய அளவில் தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்திய தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 95 தங்கம், 112 வெள்ளி மற்றும் 202 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

67-வது இந்தியப் பள்ளிகளின் விளையாட்டுக் கூட்டமைப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் நடத்திய தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 409 மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினிகள்

மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும், ஆசிரியர்கள் நலனைக் காக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.3.2023 அன்று பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அந்த அறிவிப்பில் ஒன்றாக, மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கேற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கைக்கணினி (Tablet) வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 79,723 ஆசிரியர்களுக்கு 101.48 கோடி ரூபாய் செலவில் கைக்கணினிகள் (Tablets) வழங்கும் திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு கைக்கணிகள் வழங்கி தொடங்கி வைத்தார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தொலைவிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த இடங்கள் மற்றும் இயற்கை சூழல்மிக்க இடங்களுக்கு செல்லாமலேயே நேரடியாக ஒளிப்பதிவுக் கூடத்தின் மூலம் மாணவர்களின் கண்முன் கொண்டு வந்து சுவாரசியமாக அறிந்து கொள்ளும் வகையில் காணொலிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இக்காணொலிகள், கல்வித் தொலைக்காட்சி, Tamil Nadu Teachers Platform (TNTP) மற்றும் YouTube வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, பள்ளிவேலை நேரத்தில் மட்டுமின்றி எந்த இடத்திலிருந்தும் எந்த நேரத்திலும் ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இதனை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இக்கைக்கணினிகள் (Tablets) வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை மேற்கொள்ளும் பொழுது இதனை ஒரு கூடுதல் வளமாக பயன்படுத்தி, மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி கற்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் ஐம்பெரும் விழாவிற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவ, மாணவியர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Also Read: ”இதுதான் எனது கனவு” : மாணவர்களிடம் விளக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!