Tamilnadu

பொதுமக்களிடம் ரூ.3 கோடி மோசடி... தலைமறைவாக இருக்கும் பாஜக நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு !

சேலம் மாவட்டம் குளத்தூர் வட்டம் நீதிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ட பிரபு. இவர் பாஜகவின் ஒபிசி அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கோவையை தலைமையிடமாக கொண்டு சோழா and சோழா சிட் பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு முன் சிவகாசி பேருந்து நிலையம் அருகே புதிய கிளை அலுவலகத்தை துவக்கியுள்ளார்.

இதனால் அங்கிருக்கும் பொதுமக்களிடம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் வகையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை மதிப்பிலான சீட்டு பிடித்துள்ளார். பாஜக நிர்வாகி மணிகண்ட பிரபுவின் பேச்சை நம்பிய அப்பகுதி மக்கள், அதிக லாபம் கிடைப்பதாக நம்பி கடந்த 10 மாதங்களாக சுமார் ரூ.3 கோடி அளவிலான பணத்தை கட்டியுள்ளனர்.

இந்த சூழலில் அந்த பணத்துடன் பாஜக நிர்வாகி மணிகண்ட பிரபு திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பயனாளிகள், அவரது பிரதான நிறுவனங்கள் இருக்கும் இடங்களான கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளிலும், அவரது சொந்த ஊரிலும் சென்று தேடியுள்ளனர். ஆனால் அங்குள்ள நிறுவனங்கள், அவரது வீடு உள்ளிட்டவை பூட்டி கிடந்துள்ளது.

இதையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இன்று விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்த புகாரில் தங்களது பணத்தை மீட்டு தரக் கோரியும், பாஜக நிர்வாகி மணிகண்ட பிரபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்த சேலத்தை சேர்ந்த பாஜக OBC அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்ட பிரபு மீது பொதுமக்கள் புகாரளித்துள்ள நிலையில், தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாகி தேடி வருகின்றனர்.