Tamilnadu

2023 - 2024-ம் கல்வியாண்டின் சாதனை... பள்ளிக்கல்வித்துறையில் ஐம்பெரும் விழா : எங்கே? எப்போது? - விவரம் !

கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து முடிந்து அண்மையில், தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும், தமிழில் 100% மதிப்பெண்கள் பெற்று பெருமை கொண்டுள்ள 43 மாணவ மாணவியருக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சீர்மிகு பாராட்டு விழா அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டு விழா உள்ளிட்ட 5 விழாக்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள் (ஜூன் 14) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெறுகிறது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பின் விவரம் பின்வருமாறு :

"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த ஆண்டின் அரசுப் பொதுத்தேர்வுகளில் 100 சதவீதத் தேர்ச்சிகள் கண்டு சாதனை படைத்துள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும், தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவ/மாணவியர் அனைவரையும் சென்னைக்கு அழைத்துப் பாராட்டும் வகையில் சீர்மிகு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் விரைவில் நடத்தப்பட உள்ளது.

அதன் அடிப்படையில் ஐம்பெரும்விழாவாக 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் நடைப்பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டுதல், 100 சதவீதம் தேர்ச்சிப்பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களை பாராட்டுதல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (Tablet) வழங்குதல், 67 வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களை பாராட்டுதல் மற்றும் அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் 14.06.2024 அன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

மேலும், தேசியப் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு (SGFI) நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற மாணவர்களின் பெயர் பட்டியல் ஏற்கனவே அந்தந்த மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ளது. இருப்பினும் அதன் விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது.

நடைபெறவுள்ள ஐம்பெரும் விழாவிற்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களை 14.06.2024 அன்று காலை 8.30 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தவறாமல் வருகை புரியும்படி தெரிவித்திடவும், அவர்கள் கலந்துகொள்வதை உறுதி செய்திடவும், நடவடிக்கையினையும் எடுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த ஐம்பெரும் விழாவில் தொடக்கக் கல்வி சார்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே தொடக்கக் கல்வி இயக்குநரால் வழங்கப்பட்டிருந்த ஆலோசனைகளின்படி ஆசிரியர்கள் கையடக்கக் கணினி பெறுவதற்கு வருகைப்புரிதலை உறுதி செய்திடவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஐம்பெரு விழாவில் திறன்மிகு வகுப்பறை சார்ந்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உரிய நடவடிக்கை (மாதிரி திறன்மிகு வகுப்பறை அமைத்தல் உட்பட) மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார். தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆளறிச் சான்றிதழை (ID Card) தவறாமல் உடன் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்திடவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேற்கண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சென்னைக்கு வருவது சார்ந்து தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், பள்ளித் துணை ஆய்வாளர் அல்லது ஆசிரியர் ஒருவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து செலவினத்தினை பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து அல்லது மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து மேற்கொள்ளவும் பார்வை-2 ல் காணும் செயல்முறைகளின் படி அறிவுறுத்தப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ்ப் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும் உரிய ஆளறிச் சான்றுடன் பங்கேற்க்கப்படுவர் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இவ்விழா சென்னை மாவட்டத்தில் நடைபெறுவதால் விழாவிற்கான பணிகளை சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேற்கொள்வதற்கு தெரிவிக்கப்படுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களும் உரிய ஒருங்கிணைப்பு பணிகளை 10.06.2024 முதல் மேற்கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் இவ்விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று மாணவர்கள் மற்றும் பள்ளிக்களின் பட்டியலோடு வெளியிடப்பட்டுள்ளது.

Also Read: குவைத் தீ விபத்து - சிக்கிய தமிழர்கள்... களத்தில் இறங்கிய அயலகத் தமிழர் நலத்துறை - முழு விவரம் !