Tamilnadu

ஓடும் இரயிலில் மதுபோதையில் ரகளை... துப்பாக்கியை காட்டி மிரட்டிய துணை இராணுவப் படையினரால் பரபரப்பு!

சென்னையில் இருந்து கோவைக்கு நாள்தோறும் செல்லும் சேரன் விரைவு இரயிலில் பயணிகள் பலரும் பயணிப்பது வழக்கம். அதிலும் பொதுப்பெட்டி என்று கூறப்படும் Unreserved பெட்டியில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு இடம்பிடித்து பயணிப்பர். இதில் அதிகளவு நெருக்கடி ஏற்படும்.

இந்த சூழலில் நேற்று சென்ற இந்த இரயிலில் அந்த பொதுப்பெட்டியில் பயணிகள் பயணித்துள்ளனர். அப்போது சென்னையில் பயிற்சி பெற்ற துணை இராணுவப் படையை சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்புத்தூருக்கு செல்வதற்காக அதே பெட்டியில் ஏறியுள்ளனர். பிறகு இரயில் கிளம்பிய சில நிமிடங்களையே அங்கிருந்த பயணிகளை மிரட்டி இருக்கையை கேட்டுள்ளனர்.

தொடர்ந்து மிரட்டி வந்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகளையும் அந்த போலீசார் தாக்கியுள்ளனர். தொடர்ந்து அங்கு கைக்குழந்தையை வைத்திருந்த தந்தையின் கழுத்திலும், அந்த குழந்தையை தண்ணீர் பாட்டில் கொண்டும் ஒரு போலீசார் தாக்கியுள்ளார். மேலும் மது அருந்திக்கொண்டே கழிவறை செல்லும் பெண்களை கிண்டலடித்தும், அவர்கள் மீது தங்களது செருப்புகளை எரிந்தும் அவதூறாக நடந்துகொண்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் இந்த வாக்குவாதங்கள் கடுமையாக கைகலப்பாக மாறவே, பயணிகள் எதிர்க்குரல் எழுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த துணை இராணுவப் படையினர், தங்கள் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன பயணிகள், இரயில் ஜோலார்பேட்டை வரவும், அபாய சங்கலியை பிடித்து இழுத்து, இரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பயணிகளின் புகாரின் பேரில் விரைந்து வந்த இரயில்வே போலீசார், பயணிகளை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், துணை இராணுவப் படையினரை வெளியேற்ற வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தி இரயிலினுள் அவர்கள் ஏறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கே சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்தே பயணிகளின் நலன்கருதி, அங்கிருந்த துணை இராணுவப்படையினரை இரயிலை விட்டு கீழே இறக்கினர், இரயில்வே போலீசார். பின்னர் பயணிகளுடன் இரயில் புறப்பட்டது. தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து துணை இராணுவப்படையினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் துணை இராணுவப்படையினர், இரயில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 75,800 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது : அமைச்சர் பெரிய கருப்பன் தகவல்!