Tamilnadu

'நான் முதல்வன் திட்டம்'- பயிற்சிக்காக லண்டன் செல்லும் தமிழ்நாடு மாணவர்கள் ! முழு விவரம் என்ன ?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை தொடங்கி வைததார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வான மாணவர்கள் முதற்கட்டமாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள லண்டன் செல்லவுள்ளனர். தமிழ்நாடு அரசு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இணைந்து, பொறியியல் மாணவர்களுக்கு சர்வதேச உயர்கல்வி அளிக்க உதவித்தொகை திட்டத்தை துவங்கியது.

இதற்கு நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தகுதி வாய்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இதில், 100 மாணவர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த மார்ச் 5 முதல் மார்ச் 16 வரை லண்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட 24 மணி நேர ஆன்லைன் பாடத்திட்டத்தை முடித்த நிலையில், தற்போது ஒரு வார நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கு பெற இங்கிலாந்து தலைநகர் லண்டன் செல்லவுள்ளனர். இந்த திட்டத்துக்கு சிறப்பாக செயல்பட 15 பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்திலிருந்து பிரதீஷ் மற்றும் ஸ்ருதி ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை லண்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.மாணவர்களின் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”நீட் எனும் பிணியை அழித்தொழிக்கக் கரம்கோப்போம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!