Tamilnadu
“என்னய்யா வேணும் உனக்கு? - கலைஞர் ரசித்த இளம் இயக்குனர்” : பிறந்தநாள் சிறப்பு பகிர்வு !
ஐந்தாவது படித்த கால்ச்சட்டைப் பருவம். கரி,செங்கல், துண்டு எடுத்து, சுருள்முடி, நேர்வகிடு, கறுப்புக் கண்ணாடி, கோட்டு மீசை வரைந்தால் அழகாக சிரிப்பார் கலைஞர்.
தஞ்சைத் தளபதி, எங்கள் குடும்பத் தலைவர் கோ.சி.மணி எங்களுக்கு விதைத்த கொள்கை மணிகள் இதயத்தில் முளைவிட்டுக் கொண்டிருந்த காலம்.
பெரியார் - அண்ணா - கலைஞர் படமேந்தி, கருப்பு சிகப்பு துண்டு கழுத்தில் சுற்றி நான் பிறந்த மேக்கிரிமங்கலம் சுற்றி திரிந்த காலம். லாரியில் ஊர் மக்களோடு சென்ற தி.மு.க. மாநாடு.
'பொன்னான தமிழ்நாட்டில் அண்ணாவின் தம்பியாய் பொலிகின்ற கருணாநிதி / கண்ணான கருணாநிதி / தி.மு.கழகத்தின் கருணாநிதி / கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...' இசைமுரசுவின் குரல் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றும்.
குத்தாலம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் நான் நாகூர் ஹனீபாவோடு அவரது காரில் வழிகாட்டியாகச் சென்றது கலைஞர் மீதான ஆசையின் பதின்வயது பரவசம்.
தேர்தல் விளம்பரங்களில் கலைஞரின் படம் வரைய ஊர் ஊராய் அலைந்த பித்து பிடித்த மனநிலை.
மயிலாடுதுறை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதன் முதலாய் கலைஞரின் தரிசனம்.
' என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!'
என்ற குரலைக் கேட்ட ஒரு பெரியவர் அன்போடு, 'போய்யா!' என கண்கலங்கி சென்றது பேரன்பின் உச்சம். போராட்டம், பொதுக்கூட்டங்கள் என பரபரப்பாய் இருக்கும் எதிர்கட்சித் தலைவரானகலைஞர் எனக்குப் பிடித்தவர்.
சென்னை வந்து கலைஞர் தொலைக்காட்சியில் 'ரசிகன்' நிகழ்ச்சியை எழுதி இயக்கினேன். ஓர் அதிகாலையில் தொலைபேசி அழைப்பு. கலைஞரின் 'ரசிகன்' நிகழ்ச்சித் தயாரிக்க தலைவர் சொன்னதாக அறிந்து மகிழ்ச்சியில் மிதந்தேன்.
ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து தயாராக இருந்த தருணம் அது.திருக்குவளை- திருவாரூர் தொடங்கி, கோவை- சிங்காநல்லூர், குளித்தலை, பாளையங்கோட்டை சிறைச்சாலை, ஈரோடு, சேலம் மாடர்ன் தியேட்டர், கல்லக்குடி என ஓராண்டுக்கும் மேல் தமிழகம் முழுவதும் படம் பிடித்தோம்.
கழகப் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர், கவிஞர் வாலி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். 'ரசிகன்' - கலைஞருக்காக ஒரு பயணம் நிகழ்ச்சியாக 20 வாரங்கள் ஒளிபரப்பானது. மிகவும் மகிழ்ச்சியடைந்தார் கலைஞர்.
அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணன் அவர்கள் என்னை கட்டியணைத்து நெகிழ்ந்தார்.
'தலைவர் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுக்கிட்டே நிகழ்ச்சியைப் பாக்குறார். தலைவரை மகிழ்ச்சிப்படுத்திட்டேப்பா' என்ற அரசு அண்ணனின் குரல் இப்போதும் ஒலிக்கிறது.
நிகழ்ச்சிக்காக கலைஞரிடம் பேட்டி கேட்டேன். வரச்சொன்னார். கேள்விகளை கொடுத்துவிட்டு நாளை வருவதாகச் சொன்னேன்.
'இப்போதே கேளுய்யா...' என்றார்.
எடுத்துச்சென்ற குறைந்தபட்ச ஒளிப்பதிவுக் கருவிகளோடு பேட்டி எடுத்தேன். கலைஞர் பல நினைவுகளை மீட்டிச் சொன்ன அருமையான பேட்டி அது.
'கலைஞர்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும் தனது செயலாளர் சண்முகநாதனை அழைத்து 'முரசொலியில்' முழுமையாக வெளிவரச் செய்தார்.
மறுநாள் 'முரசொலி'யோடு கலைஞரைச் சந்தித்தேன். திரும்பவும் பேட்டியை முழுவதுமாகப் படித்தார்.
நெகிழ்ந்தவராக, 'என்னய்யா வேணும் உனக்கு?' என்றார்.
நான் கலங்கி கலைஞரின் காலைத்தொட்டு, 'எங்களுக்கெல்லாம் நெறைய செஞ்சுட்டீங்கய்யா' என்றேன்.
புன்முறுவல் பூத்து என் தோளைத் தட்டினார்.
ஒரு விழாவில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் திரும்பிய பிறகு, இந்த இளைஞரா கலைஞர் 'ரசிகன்' நிகழ்ச்சியை செய்தது? என்று வியந்ததாக அறிந்தேன்.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக, 'சொல்வதைச் செய்வார் - சொல்லாததையும் செய்வார் கலைஞர்' என்று கலைஞரின் சாதனைகளை வழங்கினோம்.
தமிழக முதல்வர் கோட்டையில் கொடியேற்றும் உரிமை, நில உச்சவரம்பு சட்டம், இட ஒதுக்கீடு, தொழில் வளர்ச்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், மேயர் ஸ்டாலினின் சிங்காரச் சென்னை - உள்ளாட்சித்துறை அமைச்சரின் குடிநீர்த் திட்டங்கள் - மகளிர் சுய உதவிக்குழு சூழல் நிதி இப்படியான சாதனைகளின் அணிவகுப்பு அது.
தளபதி மு.க. ஸ்டாலின் தனது உதவியாளரை அனுப்பிப் பாராட்டினார். தமிழகம் முழுவதுமான சாதனைகளைச் செய்ய வலியுறுத்தினார்.
2016 தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் 20 வார 'ரசிகன் - கலைஞருக்காக ஒரு பயணம்' நிகழ்ச்சியை இரண்டு மணி நேரம் தொகுத்து ஒளிபரப்பினோம். அன்று இரவு அந்த நிகழ்ச்சியைப் பார்த்த கலைஞர் மறுநாள் வரச்சொன்னார். கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் அவர்களுடன் சென்று சந்தித்தபோது,
'இவையெல்லாம் உங்கள் ஓய்வில்லா உழைப்புக்கு எங்கள் அர்ப்பணிப்பு அய்யா! " என்றேன்.
நிமிர்ந்து பார்த்தவர் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய தனது பிரச்சார நிறைவுரையைப் பற்றிக் கேட்டார்.
என்னைக் கவர்ந்த பகுதியைப் பேசிக்காட்டினேன்.
"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழி வாங்குவோம்... எப்படி? அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உலக அளவில் செம்மைப்படுத்தி, சேது சமுத்திரத் திட்டம், கைவிடப்பட்ட தி.மு.கவின் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவேன். ஏழை எளியோருக்கு நன்மைகள் செய்வது, பழிவாங்குவது என்றால் அதனை தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பான் இந்த கருணாநிதி. நான் அண்ணாவால் வளர்க்கப்பட்டவன். அவரின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை இதயத்திலே வைத்திருப்பவன்..!"
கலைஞரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. கன்னம் துடித்தது. நான் மிரட்சியில் கலைஞரின் வீங்கிய கால்களை பிடித்தேன். சிறிது அமைதிக்குப் பின் விடைபெற்றுத் திரும்பிய எங்களைத் திரும்ப அழைத்து,
'வீட்டில் அனைவரும் நலமா?' என்றார். நெகிழ்ந்தேன்.
பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கி,
அண்ணா தந்த, 'தமிழ்நாடு' எனும் நிலத்தைக் காத்து,
அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெரும் தீபம்
சுடர்விட்டு எரிகிறது.
காவேரி மருத்துவமனை வாசலில், நள்ளிரவில் நம்பிக்கையோடு நடுச் சாலையில் படுத்திருக்கிறார்கள். சூரியன் உதிக்கும் முன் அவர்கள் முழக்கம் கேட்கிறது.
"எழுந்து வா.. எங்கள் தலைவா..!"
முதுமையில் இருந்த கலைஞரிடம் குடும்ப உறுப்பினர்கள், அவருக்கு பிடித்தமான எதாவது ஒரு வார்த்தையை எழுதச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர் எழுதியதோ ஒன்றுக்கு மூன்று வார்த்தை.
'பெரியார் , அண்ணா, தமிழ்நாடு.'
இந்த மூன்றுமாக இருப்பவர் தானே கலைஞர்.
- கி.மணிவண்ணன்., ரசிகன் நிகழ்ச்சி இயக்குனர். கலைஞர் தொலைக்காட்சி.
நன்றி : புதிய தலைமுறை வார இதழ், 09 ஆகஸ்ட் 2018.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!