Tamilnadu

“பகையோரால் அவரை இன்னும் வீழ்த்த இயலவில்லை” - கலைஞருக்கு தொல். திருமாவளவன் புகழாரம் !

தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலும் தேசிய அரசியலிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக தனிப் பெரும் தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை முதலமைச்சராக இருந்து நவீன தமிழ்நாட்டை உருவாக்கியதில் அதன் சிற்பியாக விளங்கியவர். இன்று முத்தமிழறிஞர் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தொண்டர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் டெல்லியில் அமைந்துள்ள அண்ணா - கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து வாழ்த்துகளும், கலைஞரின் சாதனைகளையும் பலரும் பாராட்டி வரும் நிலையில், பகையோரால் அவரை இன்னும் வீழ்த்த இயலவில்லை என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டு அரசியலைத் தன்னைச் சுற்றியே சுழலச் செய்த ஆளுமை மிக்க தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். கலை, இலக்கியம், சமூகம், அரசியல் என பல்வேறு தளங்களில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி வரலாறு படைத்தவர்.

பெரியார், அண்ணா வகுத்த பாதையில் சமூகநீதியை நிலைநாட்டிச் சமத்துவம் படைத்திட பாடாற்றியவர். சமத்துவபுரம் அவரது கனவுத் திட்டங்களில் புரட்சிகரமானது. தனது இறுதிமூச்சு வரையில் கொள்கைப் பகைவர்களின் குலை நடுங்க வைத்த சனாதன எதிர்ப்புப் போராளி!

அவரது மறைவுக்குப் பின்னரும், அதிலும் அவரது நூற்றாண்டு விழா காலத்தில், திமுக ஆட்சியிலிருப்பது அவருடைய பகையோரால் அவரை இன்னும் வீழ்த்த இயலவில்லை என்பதையே உணர்த்துகிறது.

Also Read: நாளை வாக்கு எண்ணிக்கை : தபால் வாக்குகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியில் கூறியது என்ன?