Tamilnadu

”முத்தமிழறிஞர் கலைஞர் இருக்கும் வரை யாரும் வாலாட்டவில்லை” : நடிகர் பிரகாஷ் ராஜ் பேட்டி!

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஒரு வருடமாக மிகச் சிறப்பாகத் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வந்தது. கலைஞரின் புகழை போற்றும் வகையில் பேச்சரங்கம், கவிதை அரங்கம், பொதுக்கூட்டங்கள், கண்காட்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், முதல் முறையாக மாபெரும் பிரமாண்ட மெய்நிகர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சரிய அனுபவம், இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி அரங்கத்தை இன்று நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பிரகாஷ் ராஜ்,"கலைஞர் குறித்த மெய் நிகர் அரங்கம் அற்புதமான ஆவணம். தற்போதைய தொழில்நுட்பத்தை பயன்படுத்திச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. நான் அவருடன் இரண்டு வருடம் பழகிய காட்சிகளை விட அதிகமான காட்சிகள் இங்கு இடம் பெற்றுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர். கலைஞரின் உயரம் என்பது, அவரால் உயர்ந்து நிற்பவர்களின் உயரத்தில் இருக்கிறது. அதனால் தான் அவர் கலைஞர். முத்தமிழறிஞர் கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கலைஞர் இருக்கும் வரை யாராலும் வாலாட்ட முடியவில்லை.

கன்னியாகுமரியில் நடைபெறும் ஷூட்டிங்கில் பிரதமர் மோடியே நடிகராகவும், ரசிகராகவும் இருக்கிறார். பா.ஜ.க-வை தமிழ்நாட்டு மக்கள் வீட்டிற்கு அனுப்பினார்கள். அதேபோல் இந்தியாவும் பா.ஜ.க-வை வீட்டிற்கு அனுப்பும்.” என தெரிவித்துள்ளார்.