Tamilnadu

காந்தியைத் தெரியவில்லையா ? மோடி 3-ம் வகுப்பு கூட படிக்கவில்லை போல - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் !

ஈரோட்டில் கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்ற மோசமான தேர்தல் நடந்தது கிடையாது. தேர்தல் ஆணையாளராக இருக்கின்ற மூன்று பேரும் பிரதமர் மோடியின் எடுபிடிகளாக மாறி விட்டனர்.

1-ம் தேதி கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. அதற்கு முதல் நாள் எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன. இவற்றை மதிப்பதில் முதன்மையான்வராக பிரதமர் இருக்க வேண்டும். ஆனால், இப்போது பிரதமராக இருக்கின்ற மோடி, தேர்தல் ஆணைய வழிமுறைகளை மீறி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வதாக பிரதமர் மோடி ஆரம்பித்து இருக்கிறார்.

இதை எல்லா தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். இது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் 48 மணிநேரம் அமைதியாக இருந்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்குப்பதிவிற்கு 2 நாட்களுக்கு முன்பே பிரச்சாரத்தை தடை செய்திருக்கிறார்கள்

இதுவரை அந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. ஆனால், இன்றைக்கு நடக்கும் தேர்தலில், விதிமுறைகள் பலவாறாக மீறப்படுவதற்கு பிரதமர் மோடி தான் காரணம். தேர்தல் ஆணையம் அவரது கைப்பாவையாக இருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் போது, தேர்தல் ஆணையத்தில் இருக்கும் அதிகாரிகளில் தவறு செய்தவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள்.

1980-ம் ஆண்டு காந்தி படத்தைப் பார்த்தபின் தான், தனக்கு காந்தியைப் பற்றி தெரியும் என பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார் இவரை இந்தியர் என்று சொல்வதா? இவர் 3-ம் வகுப்பு கூட படிக்கவில்லை போலிருக்கிறது. காந்தியைத் தெரியவில்லை என்று ஆப்பிரிக்க நாடுகளில் கூட யாரும் சொல்ல மாட்டார்கள்.

உலக வரலாற்றில் கத்தி இன்றி, ரத்தம் இன்றி சாத்வீக வழியில் போராடி, நாடு சுதந்திரம் அடைய முடியும் என்று காந்தி வழிகாட்டினார். இதை ஏற்று பலர் சாத்வீக போராட்டம் நடத்தில் உலகில் விடுதலை பெற்றுள்ளனர். அடிமைகளாக இருந்தவர்கள், அடிமைத்தனத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.அதற்கு காந்திதான் காரணம்.

கருப்பு இன மக்களும், வெள்ளை இன மக்களும் சமம் என ஆபரஹாம் லிங்கன் போராடியது போல், அதைப்போல் வேகமாக போராடியவர் காந்தி. அமெரிக்காவில் ஒபாமா என்ற கருப்பர் ஜனாதிபதியாக வர முடிந்தது என்று சொன்னால், அது காந்தியால்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

இது போன்ற வரலாற்று நிகழ்ச்சிகளை எல்லாம் மறந்து விட்டு, பிரதமராக இருக்கிறவர் காந்தியைத் தெரியாது என்று சொன்னால், எவ்வளவு பெரிய அறிவிலியை நாம் பிரதமராக ஏற்றுக் கொண்டு இருகிறோம் என வெட்கப்பட வேண்டியுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நல்ல ஆட்சியைத் தரும்"என்று கூறினார்.

Also Read: தமிழ்நாட்டின் ஒத்துழைப்பு இல்லாமல் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - அமைச்சர் துரைமுருகன் !