Tamilnadu
”எத்தனை நாட்கள் தியானம் இருந்தாலும் மக்களின் முடிவை மோடியால் மாற்ற முடியாது” : காங்கிரஸ்!
மோடியின் படுதோல்வி தமிழகத்திலிருந்து தொடங்கிவிட்டது. எத்தனை நாட்கள் தியானம் இருந்தாலும் மக்களின் முடிவை மோடியால் மாற்ற முடியாது என்பது உறுதி என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.எஸ்டி., பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இறுதிக் கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ளன.
ஜூன் 30 ஆம் தேதி 7 ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைகிறது. அதன்பிறகு எந்த ஒரு அரசியல் கட்சியும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
ஆனால் விதியை மீறுவதே மோடியின் வேலையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுவரை நடந்த 6 கட்ட மக்களவை தேர்தல்களிலும் பாஜக படுதோல்வியை சந்திக்கும் என்று அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இயக்கம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ளது.
இது மோடிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதன் காரணமாக பிரதமர் என்ற நிலையை தாண்டி, நாலாந்தர பேச்சாளராக மாறிவிட்டார். நானே கடவுள் என்றது, பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர் என்ற பேச வைத்தது இந்து மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னதாக, சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர் விஷத்தை கக்கியது நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியது. தோல்வியின் விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார் மோடி. அதோடு, தேர்தல் விதியையும் காலில் போட்டு மிதிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், நாளை முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரி விவேகானந்தா பாறையில் தியானம் மேற்கொள்கிறார். வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு மக்கள் சுயமாக சிந்திக்கத்தான் பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் தேர்தலை மனதில் கொண்டு, வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் முழுமையாக திருப்பவே இந்த தியான நாடகத்தை நடத்துகிறார்.
ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்தார். வட இந்திய மக்கள் புறந்தள்ளி விட்டார்கள். கடைசியாக தியானம் என்ற ஆயுதத்தை எடுத்திருக்கிறார். அதுவும் தோல்வியில் தான் முடியும் என்பது ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவில் தெரியவரும்.
தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து வஞ்சித்தும் அவமானப்படுத்தியும் வரும் மோடிக்கு தமிழ்நாட்டில் தான் அமைதி கிடைக்கிறதா? தமிழ்நாட்டுக்காரர் ஒடிசாவை ஆளலாமா? என்று பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் பி.கே.பாண்டியனை பார்த்து கேட்கிறார்.
இது இனத்துவேஷம் அல்லவா? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அதோடு, பூரி ஜெகன்னாதர் கோயில் நகைக்கிடங்கு சாவியை தமிழ்நாட்டுக்கு கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறி ஒட்டுமொத்த 8 கோடி தமிழர்களையும் மோடி அவமானப்படுத்தினார்.
தரமற்ற நிலக்கரியை தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்து 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை தன் தொழிலதிபர் நண்பர் அதானி பயன்பெற காரணமாக இருந்தது இதே மோடி தானே? தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவிட்டு அவர்கள் மீதே சேற்றை வாரி தூற்றுவது அநாகரீகம் அல்லவா?
இதற்கெல்லாம் பிராயச்சித்தம் தேடத்தான் கன்னியாகுமரியில் தியான நாடகத்தை மோடி நடத்தப் போகிறாரா? ஏற்கெனவே மோடி மற்றும் அமித்ஷாவின் முகத்திரை கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி இவர்களுக்கு அரசியல் துறவறம் தரப் போகிறார்கள் இந்திய மக்கள்.
எனவே, மோடியின் படுதோல்வி தமிழகத்திலிருந்து தொடங்கிவிட்டது. எத்தனை நாட்கள் தியானம் இருந்தாலும் மக்களின் முடிவை மோடியால் மாற்ற முடியாது என்பது உறுதி. மோடியின் பித்தாலாட்ட அரசியலையும் கன்னியாகுமரி வருகையையும், தியான நாடகத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி.,எஸ்டி., பிரிவு கடுமையாக எதிர்க்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?