Tamilnadu

ரயிலில் ரூ. 4 கோடி சிக்கிய விவகாரம் : நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் ஆகியோருக்கு CBCID சம்மன் !

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னர் வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருள்கள், பண விநியோகம் நடைபெறுகிறதா எனத் தீவிர சோதனையில் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அதில் 3 பேரிடம் ரூ.4 கோடி ரொக்கப் பணமும், அவர்கள் மூவரும் பா.ஜ.க உறுப்பினர் என்பதற்கான அட்டையும் சிக்கின.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்து பாஜக வேட்பாளர் நயினாருக்கு சொந்தமான வீடு, நண்பர்கள் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் அதிகாரிகள், வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.2 லட்சம் பணம், வேஷ்டி, ஃபுல் பாட்டில், டின் பீர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவிநாயகம், பாஜக தொழில் பிரிவு தலைவர் கோவர்தன் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். வரும் 31ஆம் தேதி ஆஜராகும்படி இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Also Read: உலக நாடுகளின் ஒற்றைக் குரல் “ALL EYES ON RAFAH” - இஸ்ரேலால் சூழப்பட்டுள்ள ரஃபாவில் நடப்பது என்ன ?