Tamilnadu

ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீடு... பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் சாதனை படைத்த திராவிட மாடல் அரசு !

தேசிய அளவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு, ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக The Times Of India இதழுக்கு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு :-

பருவநிலை மாற்றம் காரணமாக பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தி வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய எரிசக்தியாக கருதப்படும் பசுமை ஹைட்ரஜனின் தேவை எதிர்காலத்தில் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவை பொறுத்தவரையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, ஒடிசா மாநிலங்கள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் பிரதமர் மோடி பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையத்தை தொடங்கி வைத்தார்.

இதனிடையே, தேசிய அளவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளது.

2026-27 ஆம் நிதியாண்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதை இலக்காக கொண்டு, அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை திராவிட மாடல் அரசு உருவாக்கி வருவதாக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், 2030ஆம் ஆண்டிற்குள் 50 லட்சம் டன் அளவிற்கு பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, நாட்டிற்கு வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் நிலையம் அமைக்கும் பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் மின்பகுப்பு அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம் சவாலான திட்டம் என்பதால், துறைமுகத்திற்கு அருகாமையிலேயே சூரிய ஆற்றல் அல்லது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக 4.2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய காற்றாலை பிரேசில் நிறுவனத்தால் திருநெல்வேலியில் நிறுவப்படுகிறது.

இது தவிர, 40 கிலோவாட் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளின் திறனை படிப்படியாக அதிகரித்து 60 கிலோவாட் மின் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவு முதலீட்டை கொண்டுள்ள பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரமும் வேகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு அரசுடன் சென்னை ஐஐடியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டம் மூலம் தெற்காசிய நாடுகளுக்கு ஹைட்ரஜனை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கும். தற்போது சாம்பல் ஹைட்ரஜனின் விலையை விட பசுமை ஹைட்ரஜனின் விலை நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த நிலையில், இவற்றின் தேவை எதிர்காலத்தில் தேவை அதிகரிக்கும் போது, பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்கும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை.

Also Read: "தமிழ்நாட்டை பசுமை தமிழ்நாடாக மாற்றுவதே எங்கள் முதல் இலக்கு".. அமைச்சர் மெய்யநாதன் தகவல்!