Tamilnadu
11 சிறப்பான திட்டங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் மகளிர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், குழந்தைகள் ஆகியோரின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் தனிக் கவனம் செலுத்தி சமூகநலத் துறையில் பல சிறப்புத் திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் கருணை வடிவமாகத் திகழ்ந்த முதலமைச்சர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றபோது கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டை வாட்டிக் கொண்டிருந்தது. உயிருக்கு அஞ்சி எல்லோரும் ஓடி ஒளிந்தனர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அச்சம் சிறிதும் இன்றி என் தமிழ்நாட்டு மக்களைக் காப்பதே என் முதல் குறிக்கோள். இந்த திருப்பணியில் என் உயிரே போனாலும் எனக்குக் கவலையில்லை என்ற உறுதியோடு இரவும் பகலும் பாடுபட்டு தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியில் தீவீரமாக உழைத்தார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் புரிவதில் தயக்கம் இன்றி நிதியுதவிகளை வழங்கினார்கள்.
கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு பெற்றோர் இருவரையும் இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்த 382 குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5.00 இலட்சம் வீதம் ரூ.19.10 கோடி; வங்கிகளில் வைப்பீடு செய்து குழந்தைகள் 18 வயதை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு வட்டியுடன் வழங்கும் திட்டத்தை உருவாக்கியதால் தாயுமானவராகப் போற்றப்படுகிறார்.
மேலும், கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குட்பட்ட 13,682 குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் 410.46 கோடி ரூபாயையும் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளின் 9 குழந்தைகளுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.27 இலட்சம் ரூபாயையும் கூடுதலாக ரூ.437.46 கோடி நிவாரணத் தொகை வழங்கினார்.
கொரொனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, பெற்றோர் இருவரையும் இழந்து உறவினர் அல்லது பாதுகாவலரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 365 குழந்தைகளுக்கு மாத பராமரிப்புத் தொகையாக ரூ.3,000/- வீதம் ரூ.23 கோடியே 149 இலட்சம் வழங்கியவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்கள்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வினை மேம்படுத்தும் நோக்கில் “தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை 2021” வெளியிட்டுக் குழந்தைகள் நலனை பாதுகாப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
முதலமைச்சர் அவர்களின் விடியல் பேருந்து திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப் பேற்றவுடன் ஆணை பிறப்பித்த 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோர்க்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் 6661.47 கோடி ரூபாய்ச் செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 450 கோடி முறை பயணம் மேற்கொண்டு மாதம் ஏறத்தாழ 1,000 ரூபாய் வரை சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
திராவிட மாடல் அரசின் மிக முக்கிய திட்டம் காலை உணவுத் திட்டம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாமதுரைத் திருநகரில் ஆதிமூலம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கிவைத்த காலை உணவுத் திட்டம், 30.992 பள்ளிகளில் 18.50 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.404.41 கோடியில் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்படுகிறது.
புதுமைப் பெண் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் உயர்கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி புதுமைப் பெண் திட்டத்தை ஆகஸ்ட் 2022 முதல் செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தடையில்லாமல் உயர்கல்வியைத் தொடரும் பொருட்டு அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கும் இத்திட்டத்தில் இதுவரை 2.73 இலட்சம் மாணவியர்க்கு 214.27 கோடி ரூபாய் மாதம் தோறும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறும் வகையில் அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையில் மாநில மகளிர் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.
சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தியுள்ளதால் சத்துணவு பணியாளர் மகிழ்ச்சியுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வாழ்த்துகிறார்கள்
சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் சத்துணவு மையங்களில் வைப்பறையுடன் கூடிய சமையலறைகளைக் கட்டுவதற்காக ரூ.69.70 கோடி செலவில் 1,291 சமையலறைகள் கட்ட ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு 1285 சமையலறைகள் கட்டி முடிக்கப்பட்டு 6 கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணிபுரியும் மகளிர் விடுதிகள்
19 மாவட்டங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் சமூக நலத்துறை மூலம் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதி நிறுவனம் (TNWWHCL) புதிய விடுதிகளை உருவாக்கவும், ஏற்கெனவே உள்ள விடுதிகளை மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அனைத்துப் பெண்களுக்கும் வழங்கவும் உத்தரவிட்டார்கள். அதன்படி, முதற்கட்டமாக, திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07 கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர்.
இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.
சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது. 17,312 சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல் உபகரணங்கள் ரூ.25.41 கோடியில் வழங்கப்படுகின்றன.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
ரூ.218.88 கோடி செலவில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 87,501 குழந்தைகள் பயனடைந்தனர். 2021-22 ஆண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் 18 வயது நிரம்பிய 1,43,908 குழந்தைகளுக்கு ரூ.341.30 கோடி முதிர்வுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் 446 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2021 முதல் டிசம்பர் 2023 வரை 7343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்கள் கொள்கை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரைப்படி மாநில மற்றும் மாவட்ட அளவில் 'சர்வதேச முதியோர் தின சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடத்தப்பட்டு மாநில மூத்த குடிமக்கள் கொள்கை – 2023, 27.9.2023 அன்று வெளியிடப்பட்டது.
திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1 இலட்சத்து 26 ஆயிரத்து 637 மகளிர்க்கு 1047 கோடி ரூபாயை திருமண நிதியுதவியாக வழங்கியுள்ளார்கள். இதில் 68,927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57,710 மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டுள்ளது.
திருநங்கைகள் நலன்
40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000/- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் 2023 மார்ச் முதல் ரூ.1,500/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் ரூ.236 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1482 திருநங்கைகள் பயனடைந்து வருகின்றனர். திருநங்கைகளுக்குச் சொந்தமாகத் தொழில் தொடங்கிட மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மூன்றாண்டுகளில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 518 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டபணிகள்துறை தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்மை அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்களை விதவைகள் / கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு முன்னுரிமையின் அடிப்படையில் நிரப்ப 9-11-2021 அன்று ஆணையிட்டுள்ளார்கள்.
தற்போது 6 வயது வரையிலான 22 இலட்சம் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு வருகிறது. ரூ.7.76 கோடி செலவில் 7,757 குழந்தைகள் மையங்களுக்கு தலா ரூ.10,000/ -விதத்தில் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.53.76 கோடி செலவில் அனைத்துக் குழந்தைகள் மையங்களுக்கும் முன் பருவக் கல்வி விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி ஊட்டசத்தை உறுதி செய்திட்டத்தின்கீழ் ஏப்ரல் 2022ல் ஒரு சிறப்பு வளர்ச்சி கண்காணிப்பு முகாம் தொடங்கப்பட்டு 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடையவர்களாகக் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.18.68 கோடி செலவில் சிறப்பு ஊட்டச்சத்து உணவு (RUTF) வழங்கப்பட்டது.
இப்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் நலனில் தனிக் கவனம் செலுத்தி பல திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால் மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனானிகள் என அனைவரும் பாதுகாப்புடன் வாழ்கின்றனர். முதலமைச்சர் அவர்களை மனமாரப் பாராட்டுகின்றனர்.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!