Tamilnadu

“சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது” - ஒன்றிய அரசுக்கு வைகோ கோரிக்கை!

காவிரிப் படுகையில், அமராவதி (பம்பார்) துணைப்படுகையின் ஒரு பகுதியான சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் வந்த செய்திகளின் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில்,தற்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

சி.பா. ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளது தொடர்பாக அவர் பேசியதாவது :-

இது அநியாயமானது அக்கிரமமானது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என சொல்லி கேரள அரசு செய்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போயின. முல்லைப் பெரியாரில் அணை கட்ட வேண்டும் என்கிறபோது உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றது.

இந்த விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளை கொண்டு குழு அமைத்தது. அணை வலுவாக இருக்கிறது ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அணை வலுவாக இருக்கும் என தெரிந்தும் இடுக்கிக்கு தண்ணீர் கொண்டு போக வேண்டும் என்பதற்காக இதனை கேரள அரசு செய்கிறார்கள். முல்லைப் பெரியாரை இடித்து விட்டு ஒரு அணைக்கட்டு போகிறோம் என கூறுகிறார்கள்.

ஒன்றிய அரசு நடுநிலையோடு ஒரு மாநிலம் மற்ற மாநிலத்தை வஞ்சிக்க கூடாது என்ற முறையில் அவர்களுக்கு சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட அனுமதி வழங்கக்கூடாது. அனுமதிக்க மாட்டோம் என பலமுறை நீதிமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இன்று அணை கட்டித் துடிக்கிறது கேரளா அரசு.

இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது. அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுக்கக் கூடாது. சுற்றுச்சூழல் அமைச்சரவையும் ஒன்றிய அரசும் அனுமதி கொடுக்காமல் அணை கட்ட முடியாது. ஒன்றிய அரசு இதில் ஒரவஞ்சகம் செய்யக்கூடாது." என்றார்.

Also Read: ”தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும்” : பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!