Tamilnadu

கடிதம் எழுதிய இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி : உயர்கல்விக்கு உதவிய முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (23.5.2024) முகாம் அலுவலகத்தில், புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி செல்வி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட உதவி செய்து, அக்கல்லூரியில் படிப்பதற்கான சேர்க்கை ஆணையினை வழங்கினார். மேலும், அம்மாணவிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி, வாழ்த்தினார்.

தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் சுசந்த அஜித்குமார் - திருமதி மரியகிறிஸ்டின் தம்பதியரின் மகள்கள் செல்வி ஷரினாகிறிஸ்ட் மற்றும் செல்வி மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கைப்பேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார்கள்.

அவர்களின் இச்செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் கையடக்க கணினிகளை (TAB) வழங்கி வாழ்த்தினார்கள்.

மாணவி சு. ஷரினாகிறிஸ்ட் அவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவத் துறையோடு தொடர்புடைய Para Medical பிரிவில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட உதவிடுமாறு அம்மாணவியின் தாயார் மரியகிறிஸ்டின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார்.

அதனை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாணவி சு. ஷரினாகிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பு படித்திட சேர்க்கை ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வின்போது, சட்டத்துறை அமைச்சர்எஸ். ரகுபதி, அம்மாணவியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

Also Read: தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கவுள்ள கூகுள் நிறுவனம் : முதலமைச்சரை சந்திக்கவுள்ள கூகுள் அதிகாரிகள் !