Tamilnadu

போக்குவரத்துத்துறையில் தி.மு.க அரசு செய்த மாற்றங்கள் என்ன? : பட்டியலிட்ட அமைச்சர் சிவசங்கர்!

தி.மு.க அரசு ஆட்சி காலங்களில் அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

2011-2021 வரையிலான 10 ஆண்டு காலத்தில் அ.தி.மு.க அரசு 14,489 புதிய பேருந்துகளை அதாவது சராசரியாக வருடத்திற்கு 1449 பேருந்துகள் என அறிமுகப்படுத்தியது. தி.மு.க அரசு 2006-2011 வரையிலான 5 ஆண்டு காலக்கட்டத்தில் 15,005 பேருந்துகள் என வருடத்திற்கு 3001 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் புதிய பேருந்துகள் வாங்காத காரணத்தினால், வயது முதிர்ந்த பேருந்துகளின் எண்ணிக்கையும், அவற்றின் ஆயுட்காலமும் உயர்ந்துவிட்டதால், அவற்றை கழிவு செய்து படிப்படியாக புதிய பேருந்துகளை மாற்ற வேண்டி உள்ளது.

KfW ஜெர்மன் வளர்ச்சி வங்கியின், மூலம் 2213 டீசல் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவது சம்பந்தப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தகுந்த அறிவுரைகள் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பேருந்து கொள்முதல் செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது பேருந்துகள் கூண்டு கட்டுவதிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது.

முந்தைய அ.தி.மு.க அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலத்தில் ரூ.23494.74 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.2,349.47 கோடி மட்டுமே வழங்கியது. தி.மு.க அரசு 2021-24 ஆண்டு வரை 4 ஆண்டு காலத்திற்கு ரூ.29,502.70 கோடி என வருடத்திற்கு சராசரியாக ரூ.7,375.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

மேலும், 2022-23, 2023-24 மற்றும் 2024-25 நிதி ஆண்டுகளில் இந்த அரசு புதிய பேருந்துகள் மற்றும் 6 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பேருந்துகளின் கூண்டுகள் புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்து 7682 புதிய பேருந்துகள் மற்றும் 1000 மின்சாரப் பேருந்துகள் மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் என 8,682 புதிய பேருந்துகள், 1,500 பேருந்துகள் கூண்டு கட்டி புதுப்பிக்க எடுத்த நடவடிக்கையில் இதுவரை 791 புதிய பேருந்துகளும் மற்றும் 858 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மேலும், 2024-25 ஆம் ஆண்டு இறுதிக்குள் 7,682 புதிய பேருந்துகளும் 1,500 கூண்டு புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் மக்களின் பயன்பாட்டிற்கு வர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 300-க்கும் அதிகமான புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கொண்டு உள்ளது.

மகளிரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன் " விடியல் பயணத் திட்டம் " கட்டணமில்லா பயணச் சேவையாக தொடங்கப்பட்டு, இது நாள் வரை மகளிர் 473.61 கோடி பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 இலட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் அவர்தம் உதவியாளர்கள் 3.78 கோடி நடைகளும் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர்.

இவர்கள் மாதமொன்றிற்கு பயணக்கட்டணத்தில் ரூ.888/- சேமித்து பிற செலவுகளுக்கு பயன்படுத்துவதாகவும், வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த அரசு எடுத்த நடவடிக்கைகளால், கோவிட்-19 காலத்திற்கு பின் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து, தற்போது 1.76 கோடி பயணிகள் தினசரி பயணிக்கின்றனர்.

பேருந்துகளை பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தி தடை இல்லாத பேருந்து சேவையை மக்களுக்கு அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முந்தையை அரசு காலத்தில் பேருந்துகள் விபத்தினால் வருடத்திற்கு, 1201 என நடந்த உயிரிழப்புகள், தற்போது 911 என குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

திமுக அரசு போக்குவரத்துக் தொழிலாளர்களின் நலனுக்காக கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தியுள்ளது.

1998 ஆண்டு முதல் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாத ஓய்வுதியம் அமல்படுத்தியது.

> போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்கிய மாறும் அகவிலைப்படியை மாற்றி தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையாக சதவீத அடிப்படையில் அகவிலைப்படி வழங்கியது.

> போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பற்றாக்குறை நிதியை (Viability Gap Fund) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வரும் நிதி ஆண்டுகளிலும், புதிய பேருந்துகள்வாங்கப்பட்டு வயது முதிர்ந்த பேருந்துகளை கழிவு செய்ய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தமிழ்நாடு மக்கள் மீது தீரா பழி சுமத்தும் இழிவான செயல்...” - மோடி, அமித்ஷாவுக்கு CPI கண்டனம் !