Tamilnadu

”கருவின் பாலினம் அறிவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” : மக்கள் நல்வாழ்வுத் துறை அறிக்கை!

யூடியூப் தளத்தில் உணவுப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இர்ஃபான். இவருக்கு கடந்த ஆண்டு திருமணமானது.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியில் கருவில் என்ன குழந்தை இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதை குடும்ப நிகழ்ச்சியில் அறிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் சிசுவின் பாலினம் அறிந்து அதை வீடியோவாக இர்ஃபான் வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து இர்ஃபான் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இப்பிரச்சனை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்க அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், You tuber இர்ஃபான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டதாகவும் அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு குழுமியிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை ஒளிப்படமாக எடுத்து 19.05.2024 அன்று தனது You tube Channal-ன் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.

இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், (PCPNDT ACT 1994) மற்றும் இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் இர்ஃபான் அவர்களுக்கு 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பானை சார்பு செய்யப்பட்டுள்ளது.

இர்ஃபான் அவர்களால் வலையொளி செய்யப்பட்ட ஒளிப்படத்தினை சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் , ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மக்களுடன் முதல்வர் திட்டம் 2.0 : 2500 சிறப்பு முகாம்கள் - மக்கள் குறைகளை தீர்க்கும் தி.மு.க அரசு!