Tamilnadu

சவுக்கு சங்கரை இயக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை : விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்!

சவுக்கு மீடியா என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வருபவர் சங்கர். இந்த பக்கத்தில் இவர் அரசியல் கட்சித் தலைவர்களையும், அரசியல் கட்சிகளையும் தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

அண்மையில் பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாகப் பேசியதை அடுத்து சங்கரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், சவுக்கு சங்கரை இயக்கிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் காண்டீபன் காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவில் கூறியிருப்பது வருமாறு:-

பத்திரிகையாளர் என்று தன்னை அழைத்துக் கொண்டு சவுக்கு மீடியா என்ற டியூப் சேனல் நடத்தி வந்த சங்கர் என்பவரை சமீபத்தில் தமிழக காவல்துறை கைது செய்தது. பதவியில் உள்ள தலைவர்கள், உயரதிகாரிகளை கீழ்த்தரமாக பேசியும் அவதூறாக பேசியும் யூடியூபில் பார்வையாளர்களை பெருக்க சர்ச்சையான தகவல்களை ஆதாரமின்றி வெளியிட்டும் பரபரப்பை கூட்டிய அந்த நபருக்கு பல யூடியூப் சேனல்கள் ஆதரவு தந்து பிரபலத்தை தேடிக் கொடுத்தன. அப்படி விளம்பரம் தேடி தானும் வருமானம் பெற்ற நபர் தான் ரெட் பிக்ஸ் யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் ஃபெலிக்ஸ் ஜெரால்டு. இவரும் ஒரு காலத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர். எல்போதெல்லாம் இவரது யுடியூப் பக்கத்துக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையுமோ அப்போது எல்லாம் சவுக்கு சங்கரை அழைத்து சர்ச்சையாக பேச வைத்துபார்வையாளர்களை கவருவது இவர்களின் வாடிக்கை.

சமீபத்தில் சங்கரை அழைத்து பேட்டி எடுத்தபோதுதான் தமிழக காவல்துறையில் கண்ணியமிக்க பெண் காவலர்கள், அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தியதுடன் அவர்களை காவல்துறை கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயரதிகாரியுடன் தொடர்புபடுத்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

அந்த நபருடன் சேர்ந்து அவரது பேட்டியை ஒலிபரப்பிய ஃபெலிக்ஸ் ஜெரால்டையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் இத்துடன் ஓய்ந்து விடக்கூடாது. இந்த நபர்களுக்கு பல துறைகளில், பல செல்வாக்கு மிக்க இடங்களில் உள்ளவர்கள் தொடர்ந்து தகவல்களை கசிய விட்டும் அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தி தண்டிக்க வேண்டும்.

அத்தகைய சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்ட நபர்களில் முக்கியமானவர் சவுக்கு மீடியா நிறுவனத்தில் எடிட்டர் இன் சீஃப் என நியமிக்கப்பட்ட கிரைம் ரிப்போர்ட்டர் என தன்னை அழைத்துக் கொள்ளும் முத்தலீஃப். இந்த நபர் தனக்குள்ள போலீஸ் செல்வாக்கை பயன்படுத்தி சவுக்கு சங்கர் கைதாவார் என்பதை முன்பே யூகித்து சவுக்கு மீடியாவில் இருந்து தனிப்பட்ட விஷயத்துக்காக விலகுவதாக சொல்லி வெளியேறியவர். சவுக்கு மீடியா யூடியூப் பக்கத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய பேட்டியில் இந்த நபர் முக்கியமானவர். இந்த முத்தலீபும் சர்ச்சையான தகவல்களை பேசி பலரது நற்பெயரை கெடுத்தவர்.

அதுபோல, இந்த முத்தலீஃபுக்கு அரசு ரகசிய ஆவணங்களை கசிய விட்டவர் தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம்... இதற்கு ஒரு முக்கிய உதாரணம், கவர்னர், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, முன்னாள் காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு IPS அவர்களைTNPSC Chairman ஆக நியமிக்க இயலாது என்று எழுதிய கடிதத்தை முத்தலிஃபுக்கு திருடி கொடுத்து அவர் மூலமாக சவுக்கு சங்கர் அக்கடிதத்தை X (TWITTER) வலைத்தலத்தில் அரசாங்க ஆவணத்தில் சட்டத்திற்கு புறம்பாக சவுக்குமீடியா மற்றும் சவுக்கு சின்னத்தையும் (Logo) வையும் போட்டு வெளியிடபட்டது.

இந்த திருஞானசம்பந்தம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் பினாமி. ஆளுநர் மாளிகையில் இந்த நபர் போடும் ஆட்டத்தை அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் ஊழியர்களிடம் கேட்டு அறியலாம். முழு நேர பிஆர்ஓ இதுவரை ஆளுநர் மாளிகையில் நியமிக்கப்படவிலலை. ஏற்கனவே இணை இயக்குநர் பிஆர்ஓவை பழிசுமத்தி ஆளுநர் மாளிகையில் இருந்தே துரத்தி விட்டவர் இந்த திருஞானசம்பந்தம், ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் விருந்தினர் இல்லம் போல மாற்றியவர். ஆளுநர் சொல்லும் தகவல்களை ஊடகங்களிடம் கசிய வைக்க சில மூத்த நிருபர்களை இந்த திருஞானசம்பந்தம் பயன்படுத்துவார்.

அரசு ஆவணங்களை திருடி சவுக்கு சங்கருக்கு முத்தலீஃப் மூலமாக விற்பார். இந்த நபர் ஆளுநர் மாளிகையில் வேலைபார்த்தபடி ஒரு பிஜேபி வார் ரூமை வெளியே நடத்தி வருகிரார். இவருக்கு யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பதை எல்லாம் விசாரித்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.

இந்த திருஞானசம்பந்தம் கவுரவ ஆலோசகர் பதவியில் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஆளுநரிடம் இருந்து ஆராய்ச்சிக்காக ரூபாய் பத்து லட்சம் வரை நிதி பெற்றுள்ளார். இதை நான் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கிடைத்த பதிலில் அறிந்தேன். இது பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இந்த கும்பல்களால்தான் ஆளுநர் தவறாக வழிநடத்தப்படுவதாக நான் சந்தேகப்படுகிறேன். சவுக்கு சங்கருடன் சேர்த்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறை கைது செய்துள்ளது பாராட்டுக்குரிய நடவடிக்கை. ஆனால் அவர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்டு கொண்டிருக்கும் சவுக்கு மீடியாவின் Editor- In-Chief என்று சொல்லிக்கொண்டு திரியும் முத்தலிஃப், லியோ, கவர்னரின் ஊடக கௌரவ ஆலோசகர் என்று கூறிக்கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக சட்டத்திற்கு புறம்பாக, அனைத்து திருட்டுவேலை களை செய்துவரும் திருஞான சம்மந்தம், பாஜகாவின் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் தமிழக சம்பந்தப்பட்ட பல முக்கிய அரசாங்க ஆவணங்களை திருடி வெளியிட்ட இந்த கும்பலை விரைவில் கைது செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் சவுக்கு சங்கர், பிலிக்ஸ் ஜெரால்ட், முத்தலிஃப், லியோ, திருஞான சம்மந்தம், அமர்பிரசாத்ரெட்டி, மற்றும் அண்ணாமலை ஆகியோரின் கடந்த 1 வருட செல் போன் அழைப்புகளை ஆராய்ந்தாலே இவர்களுக்கிடையே உள்ள நெருக்கமான தொடர்புகளின் குட்டு வெளிப்படும். இவர்கள் கூட்டாக சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செய்த அத்தனை திருட்டு தனங்களும் தமிழக மக்களுக்கு தெரியவரும். இவர்களை இயக்குவதே தமிழக பாஜக தலைவர் அண்ணமலை தான்.

இவர்கள் செய்வது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரான செயல் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனனாயக அரசுக்கு எதிராக தவறான மற்றும் சட்டம் & ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாகவும், தமிழக முதல்வரையும் மற்றும் தமிழக அரசின் திட்டங்களையும் எவ்வித ஆதாரமுமின்றி ஊழல் நடப்பதாக மக்களிடம் பொய்யான செய்திகளை பரப்பி குழப்பம் விளைவித்தல், தமிழக அரசு மீது அவதூறு பரப்புதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது, இதனை வைத்து பணம் பறிப்பது போன்ற செயலை செய்து வருவதையே தொழிலாக செய்து வருகின்றனர். இவர்கள் செய்வது தேச விரோத செயலாகும்.

ஆகவே, இவ்விஷயுத்தில் காவல் துறை இயக்குநர் அவர்கள் பாரபட்சமின்றி இந்த கும்பலை தீர விசாரித்து, இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அருவருக்கத்தக்க பேச்சு... பாஜக வேட்பாளருக்கு பிரசாரம் மேற்கொள்ள தடை... தேர்தல் ஆணையம் நடவடிக்கை!