Tamilnadu

India Skills போட்டி... 40 பதக்கங்களை குவிந்த மாணவர்கள்: நான் முதல்வன் திட்டத்தால் மகுடம் சூடிய தமிழ்நாடு

இந்தியா ஸ்கில்ஸ் 2024 என்கிற நாட்டின் மிகப்பெரிய திறன் போட்டி டெல்லி துவாரகாவில் உள்ள யஷோபூமியில் ஒன்றிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோா் அமைச்சகம் சார்பில் நடந்து முடிந்துள்ளது.

இந்திய திறன் மேம்பாட்டு கழத்தின் சார்பில் நடைபெற்ற "India Skills 2024" போட்டியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் - "நான் முதல்வன்" திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 40 பதக்கங்களை கைப்பற்றி தமிழ்நாடு மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மே 15 ஆம் தேதி துவங்கிய இந்த போட்டிகள் தொடா்ந்து 4 நாட்கள் நடைபெற்றது. இதில் இந்திய முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து 50 க்கும் மேற்ப்பட்ட துறைகளில் நவீன தொழில்நுட்பம் சார்ந்து திறன் போட்டிகள் நடைபெற்றது.

மொபைல் ரோபோடிக்ஸ், பேஷன் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் போட்டிகள் தேசிய அளவில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், மொபைல் ரோபோடிக்ஸ், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 61 துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த திறன் போட்டிகள் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து 86 பேர் பங்கேற்ற நிலையில் அதில் 6 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம், 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 40 பதக்கங்களை வென்று அசத்தி உள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் ஒடிசா முதலிடமும், கர்நாடகா இரண்டாம் இடமும் தமிழ்நாடு மூன்றாம் இடமும் பெற்றுள்ளது. இந்திய திறன் போட்டியில் தங்கம் வென்ற 6 மாணவர்கள் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் "உலக திறன்" போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் இவா்களுக்கு சிறந்த தொழில்துறை பயிற்சியாளா்களின் உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் போட்டியில் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த 1,500 போட்டியாளா்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அளவிலான திறன் போட்டியில் தமிழ்நாடு 21 பதக்கங்களை வென்ற நிலையில் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பின் தற்போது நடைபெற்ற திறன் போட்டியில் 40 பேர் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.

Also Read: நாட்டின் பிரதமரா அல்லது மெட்ரோ திட்டத்தின் சேர்மனா? : விடியல் பயணத்தை முடக்கும் மோடிக்கு முரசொலி கண்டனம்!