Tamilnadu

“செவிலியர்களுக்காக கழக அரசு தொடர்ந்து தொண்டாற்றும்...” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

இன்று உலக செவிலியர் தினத்தையொட்டி தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தினர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் தலைவர் சத்திவேல் மற்றும் மாநில பொருளர் காளியம்மாள் மற்றும் மாநில இணைச்செயலாளர் ஜீவா ஸ்டாலின் மற்றும் செவிலியர்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து பூங்கொத்துக்களை கொடுத்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உலக செவிலியர் தினத்தை ஒட்டி அரசு செவிலியர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியர்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகள் அதாவது 90 சதவீதம் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

1412 ஒப்பந்த செவிலியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே ஒப்பந்த செவிலியர்களாக இருந்து அவர்களுக்கு 14,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டிருந்தது. அது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அது ஒரு மட்டுமில்லாமல் ஒப்பந்த செவிலியர்களாக எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகாலமாக நிரந்தரம் செய்யப்படாமல் இருந்தன. அந்த வகையில் இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 1912 எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாக பணியமடுத்தப்பட்டனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டதுக்கு பிறகு பெண் சுகாதார தன்னார்வலர்கள் 10,969 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நியமிக்கப்பட்ட நாளிலிருந்து பகுதிநேர பணியாளர்கள் மக்களுக்கு மருத்துவத்தில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு படிப்படியாக இன்றைக்கு ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டு 5,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 10 ஆயிரத்து 969 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக செவிலியர்களைப் பணியிட மாற்றம் கலந்தாய்வு என்பது மிக நீண்ட கால குழப்பமாக இருந்தது அதற்கு தீர்வு காணும் வகையில் இன்றைக்கு அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 9 ஆயிரத்து 535 செவிலியர்கள் கலந்தாய்வு மூலம் அவரவர் விரும்புகிற இடத்தில் பணிகளுக்கு சென்று இருக்கிறார்கள்.

எம்.ஆர்.பி மூலம் பணி நியமனம் வெளிப்படத் தன்மையோடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு முன்பாக கிராம சுகாதார செவிலியர்கள் சுகாதார செவிலியர்கள் 2400 க்கும் மேற்பட்டவர்களை எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. சங்கத்தின் சார்பில் ஏற்கனவே அரசுக்கு வைத்த கோரிக்கை சிறந்த செவிலியர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கம் கொடுக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையும் அரசு ஏற்று 19 செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கும் பணிக்கான தேர்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் அது முடிந்த பிறகு அந்த விருதுகள் வழங்கப்படும்" என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பணியாற்றக்கூடிய சகோதரர்களுக்கு தமிழக அரசு சார்பில் செவிலியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Also Read: “தமிழ்நாட்டில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் இல்லை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!