Tamilnadu

RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!

இது உண்மையா? ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் விதிகளுக்குப் புறம்பாக ஆர்.எஸ்,எஸ், தலைமையைக் கொண்டு வர சூழ்ச்சியா? என்ற தலைப்பில் விடுதலை நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள தலையங்கம் வருமாறு:-

திருப்பெரும்புதூரில் இயங்கிவரும் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் இன்றி இயங்கிவருகிறது.

2022 ஜூலை மாதத்திலேயே இயக்குநர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டது. வந்திருந்த விண்ணப்பங்கள் கடந்த 2023 ஜூலை மாதமே பரிசீலிக்கப்பட்டு இறுதிப் போட்டியாளர்கள் பெயர் பட்டியல் தயாராகிவிட்டது.

ஆனால், இவ்வளவு காலமாக இயக்குநருக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை. பொறுப்பு இயக்குநர்தான் நிர்வாகம் நடத்திவந்தார்.இப்போது திடீரென மே மாதம் 14 ஆம் தேதி இயக்குநர் பதவிக்கான நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் என்பது கண் துடைப்பே!

ஆட்சி மாறப்போகிறது என்று தெரிந்ததும், போவதற்குள் அவசர அவசரமாக ஓர் ஆர்.எஸ். எஸ்.காரரைப் பதவியில் கொண்டு வந்து அமர்த்துவதற்கான ஏற்பாடுதான் இந்த நேர்காணல் நாடகம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் இயக்குநர் பதவியை நிரப்புவதற்கு திடீரென முயல்வது ஏன்?

தேர்தல் ஆணையத்திற்கு இந்தத் தகவல் தெரியுமா? ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதா? சிறப்பு அனுமதி பெற்றுள்ளார்களா? என்ன அவசியம்- அவசரம், இத்தனை மாதங்களுக்குப் பிறகு?

அடுத்த 5 ஆண்டுகளுக்கு மறைமுகமாக இந்த நிறுவனத்தை ஆக்கிரமிப்பதற்கான முயற்சியில், விதிமுறைகளுக்குப் புறம்பாக ஆர்.எஸ்.எஸ். இறங்கி இருக்கிறது.

இந்திய அரசாங்கத்தின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் 11.01.2016 அன்றைய அலுவலகக் கடித எண். 14017/15/2015-Estt. (RR), இரண்டாம் பாராவில்,“அனைத்து அமைச்சகங்களும் /துறைகளும் தங்கள் அமைச்சகங்கள் / துறைகளில் நேரடி ஆட்சேர்ப்பு முறையின் மூலம் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கும் போது, விளம்பரம், எழுத்துத் தேர்வு நடத்துவது, அல்லது நேர்காணல் நடத்துவது உள்பட முழு ஆட்சேர்ப்பு செயல்முறையும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்" என்று இந்திய அரசு தெளிவுறுத்துகிறது.

அதாவது விளம்பரம் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் அப் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். இந்த நடைமுறை (ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் போன்ற) தன்னாட்சி நிறுவனங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதம் தெளிவுபடுத்துகிறது.

இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஆர்.எஸ். எஸ்.காரருக்கு ஒதுக்குவதற்காக இவ்வளவு அவசர அவசரமாக நேர்காணல் நடத்துவது மேற்சொன்ன இந்திய அரசின் விதிமுறைகளுக்கும், தேர்தல் நடத்தை விதிமுறை களுக்கும் முற்றிலும் மாறானதும், வெளிப்படைத் தன்மைக்கு மாறானதும், உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியதும் ஆகும் என்பதை அனைத்துக் கட்சியினரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறோம்.

- நன்றி விடுதலை நாளேடு

Also Read: ”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!