Tamilnadu

வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? : தேர்தல் ஆணையத்திற்கு தொல்.திருமாவளவன் MP கேள்வி!

வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு, வி.சி.க தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது ஏன் என்று தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை சில மணி நேரங்களில் முடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன் என்றும், இதுதொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருத்தி அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குப்பதிவில் 5.5 சதவீதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 5.74 சதவீதமும் உயர்ந்திருப்பதற்கான தகுந்த காரணங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்களை களைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Also Read: வாக்களிக்க விடாமல் இஸ்லாமியர்கள் மீது போலீசார் கொடூரத் தாக்குதல் - தலைவிரித்தாடும் பாஜகவின் அராஜகம்!