Tamilnadu

சென்னையில் Rockwell Automation நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதிலும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அண்மையில், சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், அமெரிக்காவின் Rockwell Automation நிறுவனம் சென்னையில் தனது புதிய உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ் வலைதளப் பதிவில், ”அமெரிக்காவின் Rockwell Automation நிறுவனம் சென்னையில் தனது புதிய உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இது உலகளாவிய மேம்பட்ட உற்பத்தி மையமாகவும், இந்தியாவின் மேம்பட்ட உற்பத்தித் தலைநகராகவும் தமிழ்நாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது.

வரும் ஆண்டுகளில் மேம்பட்ட உற்பத்தித் துறையில் தமிழ்நாடு பெறப் போகும் புதிய அதிதொழில்நுட்ப முதலீடுகளின் தொடக்கம். கடந்த ஜனவரி மாதம் டாவோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் Rockwell Automation நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிளேக் மோரெட்டுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவே இந்த விரிவாக்கம் என்றும், தொழில்துறை நவீனமாக்கலின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்காற்ற உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையால், தமிழ்நாடு தொடர்ந்து குறிப்பிடத்தக்க வகையில் உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, நமது வலுவான உற்பத்தி திறன்களை வெளிப்படுத்தி வருகிறது.

ஒரகடத்தில் அமைய உள்ள Rockwell நிறுவனத்தின் புதிய ஆலை, அப்பகுதியின் உற்பத்தி சூழலை மேலும் மேம்படுத்தும். 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த அதிநவீன தொழிற்சாலை திறக்கப்படும். இதன் மூலம் நமது இளைஞர்களுக்கு உயர்தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.