Tamilnadu

“இது அண்ணனின் சீதனம்” : தமிழ்நாட்டு தேர்தல் வெற்றியின் கதாநாயகன் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ !

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியமைந்த பிறகு மகளிருக்கு என பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மகளிருக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உள்ளிட்ட திட்டங்களை சொல்லலாம். மேலும் தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அதில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றபோது கையெழுத்திட்ட முதல் 5 திட்டங்களில் ஒன்று மகளிர் இலவச பயணம். இந்த திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறது. அந்த வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமான கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தை, கடந்த ஆண்டு (2023) பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று (செப். 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டமானது பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கு வழிவகை செய்கிறது. பெண்களுக்கு மிகவும் எளிதாக வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு பல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் மூலம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது ஒவ்வொரு குடும்ப பெண்களின் உரிமைத் தொகை என்பதாலே இதற்கு கலைஞர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மகளிர் பயனடைந்து வருகின்றனர். இந்த ரூ.1000 இருப்பதால், பெண்கள் தங்களுக்கு தேவையான சிறு சிறு விஷயங்களை கூட, தங்கள் குடும்பத்தினரிடமோ, கணவரிடமோ கேட்காமல் வாங்கிக்கொள்ள முடிகிறது. தற்போது வரை மாதம் தவறாமல் குடும்ப பெண்களுக்கு இந்த உரிமைத் தொகை சென்றடைகிறது.

இந்த திட்டமானது இந்தியா முழுவதும் வரவேற்கப்படுகிறது. அதன் எதிரொலியாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இதனையும் முதன்மையாக அறிவித்தது. தற்போது கர்நாடக மாநிலத்திலும் இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இந்த திட்டம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று, பயன்பெறும் மகளிரும் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்துக்கு சென்றபோதும் கூட, இந்த திட்டத்தை பெண்கள் பலரும் பாராட்டி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இந்த உரிமைத் தொகையானது அண்ணன், தங்கைகளுக்கு கொடுக்கும் சீர் என்றும் பெண்கள் பலரும் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கழக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி உள்ளிட்ட பலரும் பிரசாரத்துக்கு சென்றபோது, இந்த உரிமைத் தொகையை மகளிர் மட்டுமல்ல, ஆண்களும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இந்த சூழலில் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது தமிழ்நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு தேர்தலில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றியின் கதாநாயகன் என்று இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பலரும் புகழ்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.

Also Read: மோடி கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்காத நிதிஷ்குமார் : புறக்கணிக்கிறாரா ? புறக்கணிக்கப்படுகிறாரா ?