Tamilnadu

அம்பேத்கர் பிறந்தநாள் : “சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !

நாடு முழுவதும் நாளை அம்பேகர் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் 'சமத்துவ நாளாக' அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை வருமாறு :

“அண்ணல் அம்பேத்கர் அவர்கள் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14-ஆம் நாள் மராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இளமையிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அம்பேத்கர், பரோடா மன்னர் உதவியுடன் அமெரிக்கா சென்று உயர்கல்வி பயின்றார். உயர் கல்விக்காக வெளிநாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்த சாதி காரணமாக இழைக்கப்பட்ட பல்வேறு கொடுமைகளுக்கும் அவமானத்திற்கும் ஆளானவர். அதன் காரணமாக, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துக் கடுமையாகப் போராடியவர். பல்லாயிரக் கணக்கானவர்களுடன் இந்து சமயத்தை துறந்து புத்த சமயத்தைத் தழுவியவர்.

பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர் . ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூக நீதிப் புரட்சியாளர் எனப் பன்முகத்திறன்களைப் பெற்றவர். இந்திய அரசியல் அமைப்புச் சாசனத்தின் வரைவுக் குழுத் தலைவராக விளங்கிய மிகப்பெரிய சட்டமேதை அம்பேத்கர். நாடு சுதந்திரம் அடைந்த பின், பிரதமர் நேரு அமைச்சரவையில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் திகழ்ந்தவர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழைப் போற்றும் வகையில் வியாசர்பாடி அரசுக் கலைக் கல்லூரிக்கு அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரி என்றும், சென்னை சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் என்றும் பெயர் சூட்டியதுடன், சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபம் அமைத்து, அதில் அவர் சிலையையும் நிறுவி அம்பேத்கர் அவர்களைப் போற்றியுள்ளது தி.மு.க. அரசு.

சாதி-சமய வேறுபாடுகளை ஒழிப்பதில் அடையாளச் சின்னமாக விளங்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த திருநாளான ஏப்ரல் 14-ஆம் நாளை, “சமத்துவ நாள்” என அறிவித்துள்ளோம். அந்நாளில் தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்போம் ! அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் போற்றி அவர் வழியில் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் பாடுபடுவோம் !”

Also Read: ”பழனிசாமியை நம்புவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல” : தி.மு.க அறிக்கை!