Tamilnadu

”இந்தியா கூட்டணிதான் இந்தியாவின் பிரதமர் முகம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

தினமணி' மற்றும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு மக்களிடம் எழுச்சிமிக்க ஆதரவு தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அதன் விவரம் வருமாறு:-

திமுக மீதும், இந்தியா கூட்டணியின் மீதும் மக்களிடம் பெரும் நம்பிக்கை இருக்கிறது. அவர்களிடம் பேசும்போது உற்சாகத்தைக் காண்கிறேன். பத்தாண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பதை தமது பிரசாரத்தின்போது மக்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதை மக்களவைத் தேர்தல் களம் காட்டுகிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தை பாஜக சிதைக்கப் பார்க்கிறது. அரசியல் லாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் மண். இங்கு மதவெறி அரசியல் எனும் நெருப்பு மூட்டிக் குளிர்காய நினைக்கும் பாஜகவுக்கு எதிரான மனநிலையே உள்ளது. நாட்டை மீண்டும் மதநல்லிணக்க அரசியலுக்கான நிலமாக மாற்றும் முயற்சியை "இந்தியா' கூட்டணி தொடங்கியுள்ளது. அதற்கான பங்களிப்பை திமுக செய்து வருகிறது.

புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான "இந்தியா' கூட்டணி வெல்லும் என்று தெரிவித்தார். டெல்லி, ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் கைது செய்யப்பட்ட நேரமும், விதமும் பாஜகவின் தோல்வி பயத்தைக் காட்டுவதாகவே உள்ளது. ஊழல் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு பாஜகவுக்கு எதிரான தலைவர்களை மட்டும் பழிவாங்கும் ஒன்றிய பாஜக அரசுதான், ஊழலை சட்டபூர்வமாக செய்த அரசு என்பதைத் தேர்தல் பத்திரங்கள் விவகாரமும், சி.ஏ.ஜி.யின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான அறிக்கையும் அம்பலப்படுத்திவிட்டன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈ.டி. எனப்படும் அமலாக்கத் துறை பிரதமர் மோடியின் ஈ.டி. என்று பொதுமக்களே பேசக்கூடிய அளவுக்கு மாறிவிட்டது.

மத்தியிலுள்ள விசாரணை அமைப்புகள் அனைத்தும் எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுவதை அனைவரும் அறிவர். பாஜகவை எதிர்க்கின்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு, கைது, சிறை, சோதனை என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாஜகவுக்கு தாவிவிட்டால் அவர்கள் மீதான வழக்குகள் ஓரம்கட்டப்பட்டு தூய்மையானவர்களாகச் சித்தரித்துத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், அமைச்சரவையில் இடமும் கொடுப்பது அப்பட்டமாக நடந்து வருகிறது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட, யார் பிரதமராக தொடரக் கூடாது என்பதற்கான தேர்தல்தான் இந்த நாடாளுமன்ற தேர்தல். இது ஒரு ஜனநாயக மீட்புப் போராட்டம். இந்தியாவின் இரண்டாவது விடுதலைப் போர். அந்த வகையில் "இந்தியா' கூட்டணிதான், இந்தியாவின் பிரதமர் முகம்.

இந்தியத் தேர்தல் ஆணையம் தன் மீது விமர்சனங்கள் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, தேர்தல் ஆணையர் ஒருவர் பதவி விலகியதும், இரண்டு பேர் புதிதாக நியமிக்கப்பட்டதும் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு இடமளித்தன. தேர்தல் தேதி அறிவிப்பு, கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றில் பாரபட்சமான அணுகுமுறை வெளிப்பட்டது ஜனநாயகத்துக்கு உகந்தது இல்லை. இப்போதும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து களத்தை எதிர்கொள்கிறோம். அந்த நம்பிக்கையை ஆணையம் காப்பாற்றும் என நம்புகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: ‘தமிழ்நாடு எதிலும் முதலிடம் !’ - தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசின் அமைப்புகள் பாராட்டு !