Tamilnadu

”வளர்ச்சி குறித்து மோடி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?” : சவால் விட்ட டி.ராஜா!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல். திருமாவளவனை ஆதரித்து சிதம்பரத்தில் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "கடந்த 10 ஆண்டாக பா.ஜ.க ஆட்சியில் அரசியல் சட்டம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்ற அனைத்தும் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இந்தியா ஜனநாயக நாடாக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் இந்த மக்களவை தேர்தல் முக்கியமானதாகக் கருதுகிறோம்.

வளர்ச்சி பற்றி மோடி பேசுகிறார். இவர் பிரதமர் ஆவதற்கு முன்பு இந்திய நாடு பெற்ற அந்நிய கடன் எவ்வளவு?. இப்போது அந்நிய கடன் எவ்வளவு?. முன்பு இருந்ததைவிடப் பன்மடங்கு பெருகி விட்டது. இதுகுறித்து மோடி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?

மோடி ஆட்சிக் காலத்தில் திட்டக்குழு ஒழிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு இருக்கின்றன. மோடி ஆட்சிக்காலத்தில் வளர்ச்சி பெற்றவர்கள் கார்ப்பரேட்டுகள்தான். அதானி, அம்பானி போன்றவர்கள்தான் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த வளர்ச்சியும் இல்லை. வளர்ச்சி என்று மோடி பேசுவது மக்களுக்கான வளர்ச்சி அல்ல. பெரும் முதலாளிகளுக்கான வளர்ச்சி.

மோடி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார். துரோகம் செய்கிறார். தமிழ்நாட்டில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜ.கவோடு அணி சேர்ந்து இருக்கிறது. இது எவ்வளவு பெரிய துரோகம். கொள்கை மோசடி. கொள்கை துரோகம். இந்தக் கட்சித் தலைவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கின்ற அ.தி.மு.க தமிழர்கள் உரிமையை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமை பறிக்கப்பட்டபோது இவர்கள் என்ன செய்தார்கள்? மோடியை வீழ்த்தினால்தான் இந்த உரிமைகளை மீட்க முடியும். மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். என திருமாவளவன் கூறுகிறார். அதுபோல் மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என எடப்பாடி கூறுவாரா?" என தெரிவித்துள்ளார்.

Also Read: "தலித் சமுதாயம் அராஜகம் செய்யும் சமுதாயம்" - சிதம்பரம் பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு !