Tamilnadu
“தமிழ்நாட்டில் நிச்சயமாகத் தாமரை மலர்வதற்கு வாய்ப்பே கிடையாது”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியை சி.என்.என் நியூஸ்-18 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் 400 என்று ஆரம்பத்தில் சொன்னார். இப்போது, போகப் போக அந்த வார்த்தையே அவர் வாயில் இருந்து வருவது இல்லை. ஏனென்றால் அவருக்கே அச்சம் வந்துவிட்டது. தெற்கைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எப்படியாவது ஒன்றிரண்டு இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என முயற்சி செய்கிறார். என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (09-04-2024) சி.என்.என் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலின் விவரம் வருமாறு:
கேள்வி: முதல் கேள்வி, நீங்கள் தமிழ்நாடு முழுவது பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில்: பெரிய வரவேற்பு இருக்கு. மூன்று ஆண்டுகால ஆட்சியில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பல நன்மைகளும் சாதனைகளும் கிடைத்துள்ளது. அதனால் மக்கள் இந்த ஆட்சி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். களத்தில் இறங்கும்போது நான் என்ன சொன்னேனோ, அதே நிலவரம்தான் இப்போதும் இருக்கு. உறுதியாக நாற்பதுக்கு நாற்பதிலும் வெற்றி பெறுவோம். களம் சிறப்பாக இருக்கிறது.
கேள்வி: பாஜக 400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி வருகிறார்கள். பிரதமர் அவர்கள், தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற தென் மாநிலங்களிலும் கவனம் செலுத்துகிறார். இன்று, ஏழாவது முறையாகப் பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இதனால் பாஜகவுக்கு தெற்கில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஆதரவு வர வாய்ப்பிருக்கிறதா?
பதில்: 400 என்று ஆரம்பத்தில் சொன்னார். இப்போது, போகப் போக அந்த வார்த்தையே அவர் வாயில் இருந்து வருவது இல்லை. ஏனென்றால் அவருக்கே அச்சம் வந்துவிட்டது. தெற்கைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எப்படியாவது ஒன்றிரண்டு இடங்களிலாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என முயற்சி செய்கிறார். அது நடக்காது. நிச்சயமாக, உறுதியாக இல்லை. தோல்வி பயம் அதிகமானதால்தான், திரும்ப திரும்ப அவர் தமிழ்நாட்டுப் பக்கம் வந்துகொண்டிருக்கிறார், எப்படியாவது இங்கே கால்பதித்துவிட வேண்டும் என. ஆனால் அது நடக்கப் போவது இல்லை. தமிழ்நாட்டில் நிச்சயமாகத் தாமரை மலர்வதற்கு வாய்ப்பே கிடையாது.
கேள்வி: பா.ஜ.க கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்து வருகிறார்கள். திமுக – காங்கிரஸ் கட்சிகளால்தான் கச்சத்தீவு இலங்கைக்குப் போனது என விமர்சனம் செய்கிறார்கள். இந்த விமர்சனம் செல்லுபடியாகுமா?
பதில்: இலங்கையில் இருக்கக் கூடிய அமைச்சரே இதுகுறித்து (இந்தியா தரப்பில் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என) விளக்கமாக அறிக்கை கொடுத்திருக்கிறார். மோடி அவர்கள் தலைமையிலான பாஜக ஆட்சி வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. அப்படியென்றால், அவர்களே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு மீட்டிருக்க வேண்டுமா வேண்டாமா? அதைச் செய்யாமல், வேண்டுமென்றே மக்களைத் திசைதிருப்புவதற்காகத் திட்டமிட்டுச் செய்கிற பிரசாரம் இது.
கேள்வி: பிரதமர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வரும்போது திமுக மீது வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு திமுக குடும்பக் கட்சி, ஊழல் கட்சி என்பது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்: பிரதமர் மோடி அவர்களுக்கு நிச்சயம் அதைச் சொல்வதற்குண்டான தகுதி கிடையாது. ஏனென்றால் இப்போது தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கொள்ளை அடித்தது, அடுத்து பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் என உருவாக்கி நிதி வசூலித்தது, இதற்கெல்லாம் கணக்கே இல்லை. அதையெல்லாம் மூடி மறைக்கவே இதைத் திட்டமிட்டுச் செய்கிறார். தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
வாஷிங் மிஷின் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு, பாஜகவில் வந்து சேர்ந்துவிட்டால், யார்மீது குற்றம் சுமத்தினார்களோ, அவர்கள் எல்லாம் கறைபடியாதவர்கள், ஊழலற்றவர்கள் என ஆக்க MADE IN BJP WASHING MACHINE-ஐ வைத்துள்ளார். இதுதான் உண்மை.
கேள்வி: இந்தியா கூட்டணியில் திமுக மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட நினைக்கிறீர்கள். பிரதமர் வேட்பாளர் போன்ற சவால்கள் இருக்கையில், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் என்ன?
பதில்: ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் வலுவான இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம். மோடியை எதிர்த்து யாரும் அரசியல் பண்ணமுடியாது என்கிற சூழ்நிலை இருந்தது. ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே உணவு… எல்லாம் ஒரே ஒரே ஒரே என ஒரேயடியாக இந்தியாவை ‘Close’ செய்வதற்காக என்னென்னவோ திட்டம் போட்டார்கள். நடக்கப் போவதில்லை, ஆனால் ஒருவேளை தப்பித் தவறி பாஜக வென்றுவிட்டால் அடுத்தது தேர்தல் என ஒன்றே இருக்காது. அதற்காகத்தான் மக்கள் விழிப்புணர்வாக இருந்து, எப்படியாவது பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என இருக்கிறார்கள். அது நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. வரக்கூடிய காலத்தில் ஜனநாயகம் மலர வேண்டும். பாஜக-வை வீழ்த்தி ஜனநாயக ஆட்சி வருமென்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
கேள்வி: நீங்கள் பிரசாரம் செய்கையில் எந்தக் கருத்துக்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு இருக்கிறது?
பதில்: ஆண்களை விடவும் பெண்களிடம் அதிக வரவேற்பு இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம், திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மகளிருக்குத்தான் அதிகமான சலுகைகளைக் கொடுத்திருக்கிறோம். சொத்தில் சமபங்கு, சுயமரியாதை, மகளிர் சுய உதவிக் குழு – இவை எல்லாம் கடந்தகால திமுக ஆட்சியில்தான் செய்யப்பட்டன. அதே வழியில் என்னுடைய தலைமையிலான திராவிட மாடல் திமுக ஆட்சியானது, தேர்தல் நேரத்தில் பெண்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறோம். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என மாதம் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள அனைவருக்கும் கொடுக்கப்படும் எனச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அது பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதன் வழியாக மாதம் அவர்களுக்கு 900 ரூபாய் மிச்சம் ஆகிறது. அதைக் குழந்தைகளுக்கு, மருந்து மாத்திரைகளுக்கு, வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இப்படி பல திட்டஙகள். அரசுப் பள்ளியில் படித்துக் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். அதை மகளிர் மட்டுமில்லாமல், இப்போது மாணவர்களுக்கும் விரிவுபடுத்திக் கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறோம். விரைவில் செய்யப் போகிறோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்களிடம் நன்றாக ‘ரீச்’ ஆகியிருக்கிறது. அதனால்தான் மிகப்பெரிய வெற்றியை எங்கள் கூட்டணிக்குத் தரப் போகிறார்கள் என நம்பிக்கையாக இருக்கிறோம்.
கேள்வி: பாஜக எத்தனை இடங்கள் வெற்றி பெறும்?
பதில்: அது மோடிக்கும் தெரியாது. நிச்சயமாகத் தமிழ்நாட்டில் ஒரு சீட் கூட வராது என்பதுதான் எனது திடமான நம்பிக்கை.
கேள்வி: அமலாக்கத்துறை ரெய்டுகள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் நடக்கிறது. இது பாஜகவுக்கு எதிராகத் திரும்புமா?
பதில்: நாங்கள் ஜனநாயக அடிப்படையில் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம். ஆனால், அவர்கள் என்ன கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்றால், ED, IT, CBI உடன் கூட்டணி அமைத்துக்கொண்டு எல்லாரையும் மிரட்டுகிறார்கள். செல்வாக்கோடு இருப்பவர்கள், செல்வாக்கோடு பிரசாரம் செய்பவர்கள், எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீதெல்லாம் ED, IT, CBI துறைகளைப் பயன்படுத்தி அச்சுறுத்தி, சிறையில் தள்ளிப் பழிவாங்குகிறார்கள். நான் முன்பே சொன்னேன், சிலர் பயந்து பாஜகவில் சேர்ந்தால் அவர்களின் வாஷிங் மிஷினில் போட்டு சுத்தப்படுத்தி விடுவார்கள். இதுதான் நடந்துகொண்டிருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?