Tamilnadu
இலங்கை விவகாரம் : “10 ஆண்டுகாலமாக பாஜக என்ன செய்தது?” - வெளுத்து வாங்கிய கமல்ஹாசன் !
இந்தியா கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி விசிக வேட்பாளர் தொல் திருமாவளவனை ஆதரித்து பானை சின்னத்தில் வாக்கு கேட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சிதம்பரம் மேலவீதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி மற்றும் திமுக நிர்வாகிகள் விசிக நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக பரப்புரைக்கு வருகை புரிந்த கமல்ஹாசனுக்கு வழிநெடுக திமுக விசிக மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதேபோல் பரப்புரையில் கமல்ஹாசனின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது, "எல்லா சித்தாந்தங்களும் மக்களுக்காக தான் தேசத்திற்கு பாதுகாப்பின்மை வரும் பொழுது அனைவரும் தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டும்.
ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் தம்பி திருமாவளவனோடு நான் இங்கு தோள் உரசி நிற்கிறேன். இன்னொரு வாய்ப்பு கொடுத்துவிட்டால், இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்து விட்டால் ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள் நாங்கள் வீரர்கள் களம் கண்டு ஆக வேண்டும்.
என் கட்சிக்காரர்கள் அண்ணன் தியாகம் செய்துவிட்டீர்கள் என கேட்கிறார்கள் இது தியாகம் அல்ல வியூகம் களம் காண வேண்டியது தேவை அதற்காக நானும் திருமாவளவன் வந்துள்ளோம்.
மக்கள் சேவை தேவை என்று உணர்ந்து 25 வருடங்களுக்கு முன்பே வந்தவர் திருமா. அவருக்கு நான் இன்று நன்றி சொல்கிறேன். இவருக்கு 60 வயது ஆகும்போது திரு மாமணி என்று ஒரு மலர் வெளியிட்டார்கள். அந்த மலரில் என்னுடைய கட்டுரையும் இடம்பெற்றது. அதில் நான் இவருக்கு தண்ணிகரில்லா தன்னேரில்லா தமிழர் என்ற தலைப்பை கொடுத்திருந்தேன்.
இன்று தூக்கத்தில் எழுப்பி என்னை கேட்டாலும் அந்த வாக்கியம்தான் ஞாபகம் வரும். என் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டேன் சாதியம்தான். என் எதிரி என் வாழ்வில் சாதிக்கு இடமில்லை என் சினிமாக்களிலும் அப்படித்தான் அப்போது ஏன் சினிமாவிற்கு ஜாதி பேர் வைக்கிறீர்கள் என்று கேட்பார்கள் விளக்கம் சொல்கிறேன் பதில் அல்ல
குடியைப் பற்றி ஒரு படம் எடுத்தால் குடிகாரன் தான் மையப் பொருளாக இருப்பார் சாதி வெறியை மையப்படுத்தி படம் எடுத்தால் அவன் பாலாய் போனதையும் பண்பட்டு போனதையும் சொல்லும் பொழுது அதை நாம் விமர்சிப்பதாகும். தமிழ்நாடு மீனவர்களை காக்க தவறிய அரசு ஒன்றிய அரசு.
இலங்கைக்கும் தமிழகத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகாலமாக பகையும் உறவும் மாறி மாறி இருந்துள்ளது. அந்த சரித்திரம் படித்தவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் தெரியும். ஆக இந்த சரித்திர கதை எல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்த பத்தாண்டு காலம் ஒன்றிய அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
விவசாயிகளின் துயரம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆணி படுக்கை ட்ரோன் மூலம் கண்ணீர் போய்க்கொண்டு வீசுகிறார்கள். எதிரிகளை எல்லாம் விவசாயிகளுக்கு செய்கிறார்கள். நான் ஏன், இதை பேசுகிறேன் நகரத்தில் வாழ்கிறேன் சினிமாவில் நடிக்கிறேன் என கேட்கலாம் நான் சோறு திண்கிறேன்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பேன் என்றார்கள். எத்தனை பேருக்கு இங்கு வேலை கிடைத்துள்ளது, சொல்லுங்கள் பார்க்கலாம். 2 கோடி வேலை வாய்ப்பு கொடுப்பேன் என்றார்கள், என்ன ஆனது? மரியாதை குறைவாக பேசுகிறேன் என்பார்கள், என்ன செய்வது அவர்கள் பெயர் நீ நீ என முடிகிறது. அதுதான் அதானி, அம்பானி மோசடி. தேர்தல் பத்திர மோசடி என செய்கிறார்கள்.
எந்த முதலாளியாவது ஆதாயம் இல்லாமல் போவாரா? அமலாக்கத்துறை வருமான வரித்துறை சோதனை அனுப்பி அவ்வாறான முதலாளிகளை வழிக்கு கொண்டு வர பார்க்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிரானது சிறுபான்மையினரை அச்சத்தில் வாழ வைப்பது. மீனவர்களை பாதுகாக்க தவறியது. விவசாயிகளுக்கு துரோகம் செய்தது இந்த ஒன்றிய அரசு.
பெண்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாத அரசு ஒன்றிய அரசு இளைஞர்களுக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லாத அரசு இந்த ஒன்றிய அரசு. ஆனால் ஒன்றிய அரசு என்று சொன்னால் கோபம் வருகிறது அதனால் மாற்றி சொல்கிறேன் இவர்கள் ஒன்றிய அரசு அல்ல மக்களுடன் ஒன்றாது அரசு இவர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.
தமிழ்நாட்டின் குரலாக தமிழ்நாட்டின் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திகழ்கிறார் இளைஞர்களின் குரலாக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார் குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை தம்பி திருமாவளவன் இருக்கிறார். அடுத்த வாய்ப்பல்ல அகற்றப்பட வேண்டியவர்கள் ஒன்றிய அரசு. தம்பி உதயநிதி அவர்கள் சொன்னார் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் வைக்க வேண்டும் என்று நானும் சொல்கிறேன். திருமாவளவன் அவர்களை 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும்.
இந்தியாவையே சிதம்பரத்தை நோக்கி திரும்பி பார்க்க வைக்க வேண்டும். கலங்கமற்ற கருப்பு வைரம் தம்பி திருமாவளவன் அவர்களை பல லட்சம் மக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் இது சமையலுக்கு உகந்த பானை சமத்துவத்தில் உயர்ந்த பானை இதில் உங்கள் அரசியல் சமையல் பொங்கட்டும்." என்றார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?