Tamilnadu

“இதைவிட எதேச்சதிகாரம் இருக்க முடியுமா? - மோடி ஆட்சி ஏன் வீழ்த்தப்பட வேண்டும்”: தெளிவாக விளக்கும் முரசொலி!

மோடி சொன்னதை வழிமொழிகிறோம்!

'தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க உள்ளோம்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். இந்த நிலைமைக்குத்தான் தமிழ்நாட்டை வைத்துள்ளார் பிரதமர்.

ஒரு காலத்தில் மாநில உரிமைகளுக்காக முழங்கியவர்தான் இன்றைய பிரதமர். ஆனால் இன்று அவரே பிரதமர் ஆனதும், மாநில முதலமைச்சர்களை மிக மோசமாக நடத்தி வருகிறார். குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது அவர் என்ன முழங்கினாரோ அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழிமொழிந்து கொண்டு இருக்கிறார்.

"டெல்லியில் இருந்து இந்தியா முழுமைக்குமான திட்டமிடல் என்பது அகற்றப்பட்டு - அந்தந்தப் பகுதிக்கு அதுபற்றிய புரிந்துணர்வுள்ளவர் துணையோடு திட்டமிடுவதுதான் என் அணுகுமுறை.-(2014 ஏப்ரல் 23- தினமணி பேட்டி) என்று சொன்னவர்தான் மோடி. அத்தகைய திட்டமிடல் இருந்ததா இந்தப் பத்தாண்டு காலத்தில்? வந்ததும் செய்த முதல் வேலையே திட்டக்கமிஷனைக் கலைத்ததுதான். மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைப்பதற்கான ஒரு இடத்தைக் காலி செய்ததுதான் மோடி செய்த முதல் வேலை.

"கூட்டாட்சித் தத்துவத்தை ஆதரிப்பவன் நான். மாநில உரிமைகளை மதிப்பதும், மாநிலங்களை ஒருங்கிணைத்துத் திட்டங்களைத் தீட்டுவதும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி அதிகாரப் பகிர்வுக்கு வழிகோலுவதும்தான் எனது அணுகுமுறையாக இருக்கும். மாநில முதலமைச்சராக நான் அடைந்திருக்கும் 12 ஆண்டு கால அனுபவத்துடன் தேசியத் தலைமையை ஏற்பதால், மாநிலங்களின் பிரச்சினையும் எனக்குத் தெரியும். மத்திய அரசின் முக்கியத்துவமும் எனக்குப் புரியும்" என்று சொன்னவர்தான் மோடி இதில் எந்தவொரு சொல்லையாவது அவர் கடைப்பிடித்துள்ளாரா? கடைப்பிடித்ததாகக் காட்ட முடியுமா?

"மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ள மாநில அரசுகளைப் பழிவாங்க மாட்டேன். எந்த வகையிலும் மாநில அரசுகள் பழிவாங்கப்படாது என உறுதி அளிக்கிறேன். என்னதான் அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் மத்திய - மாநில உறவு சீர்குலைய இடம் தர மாட்டேன்" என்று பிரதமர் ஆவதற்கு முன் 2014 ஏப்ரல் 19 அன்று பேட்டி அளித்தவர் மோடி இந்த பத்தாண்டு காலத்தில் அவர் செய்தது எல்லாமே பழிவாங்கல்கள்தான். மத்திய - மாநில உறவுகள் என்பதே அவரது ஆட்சிக் காலத்தில் இல்லை. மத்திய - மாநில கசப்புகள் தான்.

"குஜராத் மக்கள் ரூ.60 ஆயிரம் கோடியை டெல்லிக்கு அனுப்புகிறார்கள் ஆனால் திரும்ப வருவது மிகக் குறைவு குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா? என்று 6.12.2012 அன்று குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது கேட்டவர்தான் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள். இதே கேள்வியைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்கிறார்கள். 'ஏன் தரமறுக்கிறீர்கள்? உங்க அப்பன் வீட்டுப் பணமா?' என்று புரியும் மொழியில் புத்திக்கு உறைக்கும் மொழியில் அமைச்சர் உதயநிதியும் இதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டு வருகிறார்.

"உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் குஜராத் மாநில பெண் ஆளுநர் கமலா பெனிவால் ஒப்புதல் அளிக்காமல் வைத்திருக்கிறார். பெண்களுக்கு எதிரியாகப் பெண் ஆளுநரே இருக்கிறார். ஒரு பெண்மணி குஜராத்தின் ஆளுநராக இருந்தும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது நமது துரதிருஷ்டமே"என்று 2013 ஏப்ரல் 8-ம் தேதி, டெல்லியில் நடந்த இந்தியத் தொழிலக சம்மேளனத்தின் (FICCI) கூட்டத்தில் பேசினார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி. அதைத் தான் இன்று தமிழ்நாடு - கேரள - கர்நாடக-மேற்கு வங்க - பஞ்சாப் -டெல்லி முதலமைச்சர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

“ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாநிலத்துடன் உறவைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஆளுநருடையது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படுகின்ற சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்றும். ஆனால் ஆளுநர் அந்தச் சட்டத்தில் கையெழுத்துப் போட மாட்டார். இப்படிச் செய்தால் மாநில அரசுகள் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? ஆளுநர் மாளிகைகள் எல்லாம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்களாக மாறிவிட்டன" -- என்று குஜராத் முதலமைச்சராக இருந்த போது சொன்னவர் நரேந்திர மோடி.

அதே செயலைத்தான் இப்போது பிரதமராக இருக்கும் நரேந்திரமோடி செய்து கொண்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய இயற்கை பேரிடரை எதிர்கொண்ட தமிழ்நாடு அதற்கான நிதியை உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டுத்தான் பெற வேண்டிய நிலைமை இருக்குமானால் - மாநில முதலமைச்சர்கள் டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தித்தான் நிதிகளைப் பெற வேண்டிய நிலைமை இருக்குமானால் - இதை விட எதேச்சதிகாரம் வேறு இருக்க முடியுமா? நாம் இப்போது காண்பது, 'ஒற்றை நபர் ஆட்சி. ஒவ்வொருவரும் தங்களது ஒற்றை வாக்கைச் செலுத்தி வீழ்த்த வேண்டிய ஆட்சி.

Also Read: “ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு அதனை மறைக்க முயற்சிக்கிறார் மோடி” - முரசொலி விமர்சனம்!