Tamilnadu

”தேர்தல் களத்தில் மோதி பார்ப்போம்” : பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால்!

தூத்துக்குடி தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகிய இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தார்.

இந்த பிரம்மாண்ட கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க மீது குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் என்று பழைய பாட்டுப் பாடுகிறார் பிரதமர் மோடி. ஆமாம் நாங்கள் குடும்ப கட்சிதான். தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடும்பத்திற்கும் நன்மை செய்யக்கூடிய கட்சி தி.மு.க. மக்களுக்காக ஒப்படைத்துக் கொண்ட கட்சி தி.மு.க

தமிழ்நாட்டை எப்படியாவது கெடுத்து விடமுடியாதா? என நினைத்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியின் தூக்கத்தைக் கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள். தூத்துக்குடி என்றால் நமது நினைவிற்கு வருவது எது?. துப்பாக்கிச்சூடு. 13 பேரைச் சுட்டு கொன்ற கொடூர ஆட்சி எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க ஆட்சி. இப்போதும் இந்த சம்பவம் எனது மனதைப் பதறவைக்கிறது.

இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட காரணமாக இருந்தது தி.மு.க அரசுதான். இதை எல்லாம் தூத்துக்குடி மக்கள் மறக்கவில்லை. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம். எங்கள் சாதனைகளையும், உங்கள் துரோகங்களையும் எடைபோட்டு மக்கள் முடிவு எடுப்பார்கள். நேரத்திற்கு ஏற்றார்போல் தவழ்ந்து தவழ்ந்து போகக்கூடியவர் பழனிசாமி. பா.ஜ.கவை விமர்சிக்காதது ஏன்?. எஜமான விசுவாசம் தடுக்கிறதா?. பாதம் தாங்கி பழனிசாமிதான் தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா?.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலைப் பிரதமர் மோடி தட்டிக் கேட்க மறுப்பது ஏன்?. தமிழ்நாட்டு மீனவர்கள் என்பதாலா?. குஜராத் மீனவர்கள்மீது தாக்குதல் நடந்தால் இப்படி அமைதியாக இருப்பீர்களா?. நீங்கள் விஸ்வகுருவா? அல்லது மௌனகுருவா?. பதில் சொல்லுங்கள் மோடி அவர்களே.

தமிழ்நாட்டிற்காகக் கொடுத்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் மோடி. ஆனால் வாயால் வடை சுட்டுவருகிறார். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடியால் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பான திட்டத்தைக் கூடக் கொண்டு வர முடியவில்லை. ஆனால் திராவிட மாடல் அரசின் சாதனை பட்டியல் நீண்டது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்பதை என்னால் நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியும். அதனால் தான் உங்களிடம் வாக்கு கேட்க வந்து இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மோடி எத்தனை முறை தமிழ்நாட்டை சுற்றி வந்தாலும் பாஜக ஒரு சீட் கூட வெல்லாது” : அமைச்சர் உதயநிதி பேச்சு!