Tamilnadu

TM கிருஷ்ணா விவகாரம் : பெரியார் குறித்த பேச்சு - “இசையில் அரசியலை கலக்க வேண்டாம்” - முதலமைச்சர் கருத்து!

கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் இந்த விருந்தானது கடந்த ஆண்டு பாம்பே ஜெய் ஸ்ரீ-க்கு வழங்கப்பட்டது. இந்த சூழலில் இந்த ஆண்டுக்கான விருது பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு அறிவிக்கப்பட்டது.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு சிலர் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை முன்வைத்துள்ளனர். காரணம் அவர் ஆன்மீகத்துக்கு எதிராகவும், பெரியார் குறித்து ஆதரவாகவும் பேசியதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பெரியாரை புகழ்ந்து பேசியவருக்கு இந்த விருது வழங்கப்படக்கூடாது என்றும், வழங்கப்பட்டால் தாங்கள் இசைக்கச்சேரிகளை புறக்கணிப்பதாகவும் ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. தொடர்ந்து இவருக்கு சிலர் எதிர்ப்புகள் தெரிவித்து வந்தாலும், பலரும் இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இசைக்கு மொழி எப்படி கிடையாதோ, அது போல் திறமை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவரது சொந்த கருத்துகளை ஒரு கலை விருது அறிவிப்புக்குள் திணித்து அவருக்கு எதிர்ப்புகள் தெரிவிக்க கூடாது என்று பலரும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டன கருத்தையும், டி.எம்.கிருஷ்ணாவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சிறந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.

கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: ”ஜனநாயகத்தை நம்பாமல் பயந்து போய் இருக்கும் பாஜக” : கனிமொழி MP விமர்சனம்!