Tamilnadu
”மக்களவைத் தேர்தலின் கதாநாயகன் தி.மு.க தேர்தல் அறிக்கை” : ஆசிரியர் கி.வீரமணி புகழாரம்!
18 ஆவது இந்திய மக்களவைத் தேர்தலையொட்டி தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியது; தேர்தலின் கதாநாயகன் என்று கூறும் அளவுக்குப் போற்றத்தகுந்தது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தேர்தலின்போதும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழமைதான். அது பெரும்பாலும் ‘சம்பிரதாயமாகத்’தான் கருதப்படும்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே கதாநாயகன்தான்!
தி.மு.க.வைப் பொறுத்தவைரயில், அது வெளியிடும் தேர்தல் அறிக்கை என்பது கடந்த காலங்களிலும் தேர்தலின் கதாநாயகனாகவே இருந்திருக்கிறது. மக்களின் பேசுபொருளாகவே கருதப்பட்டு இருந்திருக்கிறது. இப்போது மற்ற மாநிலங்களுக்கும்கூட கலங்கரை வெளிச்சமாக உள்ளது!
இப்பொழுது நடைபெறவிருக்கும் 18 ஆவது இந்திய மக்களவைத் தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் நேற்று (20-3-2024) வெளியிடப்பட்ட 64 பக்கங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையானது மணிமகுடம் சூட்டப்பட்டதாக ஒளிவீசுகிறது என்பதைக் கூறவேண்டும்.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே ஒளிவிளக்கு!
மாநில சுயாட்சியை விரும்பும் எல்லா மாநிலங்களுக்குமான உரிமைத் திட்டங்களாகவும், அறிவிப்பாகவும் இது அமைந்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் கொள்கையான கூட்டாட்சியை ஒழித்து, மாநில அமைச்சரவைகள் இல்லாத ஒற்றை அரசு - ஒன்றிய அரசு மட்டுமே இருக்கவேண்டும் என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதம் - கூட்டாட்சித் தத்துவத்திற்கு விரோதம்!தேசிய அளவில் பார்த்தாலும் இந்தியா கூட்டணியின் நோக்கத்தைப் பறைசாற்றுவதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்தைச் சகித்துக் கொள்ளாத மதவாத அரசு என்பது - அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகவே தெரிவதை அறிய முடியும். பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களின் சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதுதான் இதற்குக் காரணம்.
பி.ஜே.பி. அரசின் நோக்கம் மதவாதமே!
அதன் நோக்கமெல்லாம் ஒரே மதம் - ஹிந்துத்துவா என்பதை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் என்ற கொள்கைகளை நீக்கிவிட்டு, அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக சுதந்திர நாள் விளம்பரத்தை வெளியிட்டது. அரசமைப்புச் சட்டம் கூறும் சமூகநீதியையும் பி.ஜே.பி. அரசு ஏற்றுக் கொள்வதில்லை.
இவற்றையெல்லாம் மனதிற்கொண்டுதான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் எடுத்த எடுப்பிலேயே ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பு’’ என்ற தலைப்பின்கீழ் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இந்திய நாட்டை மதச்சார்பற்ற, சமதர்மக் குடியரசாக அமைப்பதற்கு உறுதிபூண்டு - இந்திய மக்கள் அனைவருக்கும் உரியது சமூக, பொருளாதார, அரசியல் நீதி என்பதை தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
அவர்கள் சித்தாந்தம் வேறு - நம் சித்தாந்தம் வேறு!
அந்த வகையில், பி.ஜே.பி. அரசின் சித்தாந்தம் வேறு - எங்களுடைய சித்தாந்தம் வேறு என்பதை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறது தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. இது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பதைவிட, ‘இந்தியா’ கூட்டணியின் ‘கொள்கை அறிக்கை’ என்று கருதப்படும் வகையில், ஆழமாகச் சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநில சுயாட்சி நோக்கி சட்டத் திருத்தம்
மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெற்றிடும் வண்ணம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை தி.மு. கழகம் ஒன்றியத்தில் அமையும் புதிய ஆட்சியைத் தொடர்ந்து வலியுறுத்தும் என்பது, மாநில உரிமையை விரும்பும் அனைத்து மாநிலங்களுக்குமான முக்கிய அம்சம் இதுவாகும்.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவருவது; ஆளுநர் பதவி தேவையில்லை; அரசமைப்புச் சட்டப் பிரிவு 356 அகற்றப்படவேண்டும்; தமிழ் ஆட்சி மொழி; தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளுக்கும் சம உரிமை; மாநிலங்களுக்கு உரிய நிதி பகிர்வு; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குத் தனி மாநில உரிமை; அம்மாநிலத்திற்கென்று நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்டம் 370 ஆவது பிரிவுக்கு உத்தரவாதம்; ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ என்ற பி.ஜே.பி. அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு; ‘விஸ்வகர்மா யோஜனா’வை செயல்படுத்தமாட்டோம்; புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கும் கார்ப்பரேட் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்தல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தமாட்டோம் என்ற அறிவிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கான பரந்துபட்ட பார்வை தி.மு.க. தேர்தல் அறிக்கையின் அடிகோடிட்டுக் காட்டத் தக்கவையாகும்.
மொழி உரிமை நோக்கி...
‘மொழிக் கொள்கை’ என்ற தலைப்பில் ஹிந்தித் திணிப்பு - மொழி ஏகாதிபத்தியம் எந்த வடிவத்தில் வந்தாலும், அதை எதிர்ப்பது, ஒன்றிய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ், ஒன்றிய அரசு பணிகளுக்கும், ஒன்றிய பணியாளர் தேர்வுவாரியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெறும் பணியாளர் தேர்வுகளுக்கும், தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழிகளாக உள்ள மொழிகளையும் இணைத்து எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தும் வாய்ப்பு, தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இணை ஆட்சி மொழியாகவும் பிரகடனப்படுத்தும்வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் 343 ஆவது பிரிவில் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வருதல், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் ஆக்கப்படுதல்; இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்துதல்; தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்பட ஆவன செய்தல் உள்ளிட்ட தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கும், உரிமைக்கும், செயல்பாட்டுக்குமான பொழிவுகள் திராவிட இயக்கப் பாரம்பரிய கொள்கையின் வீச்சுகளாகும்.
சமூகநீதிக்கான சங்கநாதம்!
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு அலுவலகங்களிலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பின்பற்றச் செய்தல், நாட்டில் உள்ள அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் இதர உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பேனல்களில் மண்டல் ஆணையப் பரிந்துரை அடிப்படையில் இட ஒதுக்கீடு, தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு, தமிழ்நாட்டில் உள்ளதுபோல் அகில இந்திய அளவிலும் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வருதல், இட ஒதுக்கீட்டில் ‘கிரீமிலேயர்’ நீக்கம், ‘நீட்’டுக்கு விதிவிலக்கு, மாநில அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாதிகளை ஒன்றிய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தல், பதவி உயர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, வால்மீகி இன மக்கள், குன்னுவார், பாரம்பரிய மீனவ சமுதாய மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு, கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்தல், அய்ந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றிய அரசு சார்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படுதல் உள்ளிட்ட சமூகநீதிக்கான உரிமைகளை நிலைநாட்டுவதில் தி.மு.க. தேர்தல் அறிக்கை மிகவும் கவனம் செலுத்தியுள்ளது - பாராட்டத்தக்கதாகும்.
பொருளாதார வளம், வேலைவாய்ப்புகளில் புதிய மைல்கல்லைத் தொடும் சேது சமுத்திரத் திட்டம்!
ரூபாய் 2,427 கோடி செலவு செய்து, கிட்டத்தட்ட பணி முடிவுற்ற சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, மதவாத கண்கொண்டு தடை செய்த அ.தி.மு.க., பி.ஜே.பி., கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் மன்னிக்கப் போவதில்லை.அந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியிருப்பது பெரிதும் போற்றி வரவேற்கத்தக்கதாகும்.
நூறு நாள் வேலைத் திட்டம் பெண்களுக்கு உள்ளதுபோல், ஆண்களுக்கும் விரிவுபடுத்துதல் - நாளொன்றுக்கு ரூ.400 ஊதிய உயர்வு என்பன எல்லாம் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை.
தொடாத துறை இல்லை - சிந்திக்காத பிரச்சினையே இல்லை!
தாயகம் திரும்பிய தமிழர் குடியுரிமை, இளைஞர் நலன், மகளிர் நலன், புலம்பெயர்வோர் நலன், மீனவர் நலன், குழந்தைகள் நலன், தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, சிறுபான்மையினர் நலன், சமூக நல்லிணக்கம், வணிகர் நலம், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சீர்திருத்தம், நெசவாளர் நலன், மருத்துவம் மற்றும் குடும்ப நலன், விவசாயிகள் நலன், இராணுவ வீரர்கள் நலன் என்று பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும்.
இவையல்லாமல், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படவிருக்கும் விலாவாரியான திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள்!
இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க. - ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகள், பி.ஜே.பி. ஆட்சியின் ஊழல்கள், வாய்ஜாலங்கள்பற்றி எல்லாம் தரவுகளோடு விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
எது விடுபட்டது, எதில் கவனம் செலுத்தப்படவில்லை என்று கூற முடியாத அளவுக்கு ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்ற பரந்துபட்ட சமதர்ம, சமத்துவ திசைக்குக் கைகோத்து அழைத்துச் செல்லும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது பிற்காலத்தில் ஆய்வுப் பட்டங்களுக்குரிய தலைப்பாகும் என்பதில் அய்யமில்லை.
புதுமைப் பெண்கள் திட்டம், மகளிர்க்கு இலவச பேருந்துப் பயணம், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, ‘மக்களைத் தேடி மருத்துவம்‘, மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம்.
இந்தியா கூட்டணிக்கே கலங்கரை வெளிச்சம் வழிகாட்டும் ஒளியே இத்தேர்தல் அறிக்கை. இதன் உள்ளடக்கத்தை வீதி வீதியாக, வீடுவீடாக உரிய முறையில் தேனீக்களாய்ப் பறந்து சென்று, கொண்டுபோய்ச் சேர்ப்பது நாட்டு நலனில் அக்கறை உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
நாற்பதும் நமதே!
புதுவையும் சேர்த்து தமிழ்நாட்டில் நாற்பதும் நமதே என்பதில் அய்யமில்லை. பத்து ஆண்டு ஒன்றிய ஆட்சியில் வேதனையைத் தவிர சாதனையின் பக்கம் தலைகாட்டாத பி.ஜே.பி,.க்கு மக்களவைத் தேர்தலில் தக்கதோர் பாடத்தைக் கற்பித்து - மதவாத அரசியலுக்கும், சித்தாந்தத்துக்கும் இடம் இல்லை - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையும், சோசலிசமுமே நாட்டை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்லும் சித்தாந்தம் என்பதை நிரூபிப்போம்!
‘‘இந்தியா கூட்டணி’’ வெல்லட்டும்!
வளர்ச்சி நாயகமான ‘இந்தியா கூட்டணி’ வெல்லட்டும்! நாசகார மதவாத சக்திகள் வீழட்டும்! வீழட்டும்!!
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வலியுறுத்திய கொள்கைகள் வழி நம் பயணம் தொடரும் என்ற பொன்னெழுத்து வாசகங்களே தி.மு.க. தேர்தல் அறிக்கையின் மேன்மையையும் , சீர்மையையும் விளக்கும்.
தேர்தல் அறிக்கையை மிகவும் நேர்த்தியாக தயாரித்த அனைத்துத் தயாரிப்புக் குழுவினருக்கு நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!