Tamilnadu

ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் : தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்!

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறன.

கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது. இந்த தேர்தலுக்கு முன்னதாக கனிமொழி எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களது குரல்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் அறிக்கையை இன்று (20.03.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கான வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அன்றாட தேவைகளான பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களும் அதில் உள்ளது. மேலும், மீனவர்கள், பெண்கள், குழந்தைகள், விவசாயிகள், மொழி உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள்:

1.ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் மீண்டும் உருவாக்கப்படும்.

2.இந்தியா முழுவதும் ரயில் விபத்துகளை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜி.பி.எஸ் அடிப்படையிலான தானியங்கி ரயில் பாதுகாப்பு, சிக்னல் கட்டுப்பாடு போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

3.அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் சம அளவில் நிதி ஒதுக்கப்படும்.

4.ரயில்வே மண்டல வேலைவாய்ப்புகளில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 90% வேலைவாய்ப்புகள் வழங்கப்படும்.

5.மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தோர், மாணவர்களுக்கு கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

6.திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நகரங்களில் புறநகர் மின்சார இரயில் சேவைகள் அமைக்கப்படும்.

7.மொரப்பூர் ரயில் நிலையத்தையும் தர்மபுரி ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய அகல ரயில் பாதைத்திட்டம் செயல்படுத்தப்படும்.

8.ஜோலர்பேட்டை ரயில் நிலையம் முதல் கிருஷ்ணகிரி ஓசூர் ரயில் நிலையம் வரை புதிய ரயில் பாதைத் திட்டம் அமைக்கப்படும்.

9.கள்ளக்குறிச்சி முதல் திருவண்ணாமலை வரை ரயில்பாதை அமைக்கப்படும்.

10.பட்டுக்கோட்டை ரயில் வழித் தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டம் இயக்கப்படும்.

11.திருவாரூர் - சென்னைக்கு இடையே பகல் நேர ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

12.திருச்சி, திருநெல்வேலி, சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

13.காரைக்கால், நாகை தஞ்சை ரயில் பாதை இரட்டை ரயில் பாதைகளாக மாற்றப்படும்.

14.சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரு புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

Also Read: ஒன்றியத்தில் ‘இந்தியா’ கூட்டணி அரசு : திமுகவின் 56 முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் !