Tamilnadu

இப்தார் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளலாம் - தலைமை தேர்தல் அதிகாரி கூறியது என்ன ?

நாடாளுமன்ற தேர்தல் குறித்த விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் உடனடியாக பணியை தொடங்குவார்கள். வேட்பு மனு தாக்களுக்கு கடைசி நாளுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே வந்து தபால் வாக்குகளை பெறப்போகிறோம்.இதற்காக 12 டி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் வீடுகளுக்கே வந்து தபால் வாக்குகளை பெற்றுக் கொள்வோம்.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் கருத்துக்களை பெற்றது. அதன்படி தமிழ்நாட்டிலும் கருத்துக்களை பெற்றார்கள்.இதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் தேதியை முடிவு செய்துள்ளது.விளவங்கோடு தொகுதிக்கு மட்டுமே தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இப்தார் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளலாம். ஆனால், அந்த நிகழ்ச்சிகளில் பிரச்சாரம் செய்ய தடை உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 25 கம்பெனி துணை இராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் முறையில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது குறித்து வங்கிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

வாக்குப்பதிவுக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாக பூத் சீலிப் வழங்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் வாக்குச்சாவடிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கோரிக்கையை அளித்தால் பரிசீலினை செய்வோம். இனிமேல் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடக்கூடாது . அரசாணைகளும் வெளியிடக்கூடாது" எனத் தெரிவித்தார். .

Also Read: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மறுக்கப்படும் ஜனநாயக உரிமை : பல ஆண்டுகளாக நடத்தப்படாத சட்டமன்றத் தேர்தல் !