Tamilnadu

தருமபுரம் ஆதீனத்துக்கு கொலை மிரட்டல் : தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய தனிப்படை!

தருமபுரம் ஆதீன மடம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றிவரும் சைவ மடம். ஆன்மீக சேவை மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், இந்த மடத்தின் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ தன்னிடம் இருப்பதாகக் கூறி அவரை பல கோடி தொகை கேட்டு கும்பல் ஒன்று மிரட்டியுள்ளது.

மேலும் பணம் தரவில்லை என்றால், கொலை செய்துவிடுவதாகவும் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமையிலான கும்பல் பகிரங்க மிரட்டல் விடுத்த நிலையில், இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பாஜக மாவட்டத் தலைவர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, உடனடியாக இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்தனர். வடக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத் சீர்காழி, பாஜக முன்னாள் ஒன்றிய செயலாளர் சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி தாளாளர் குடியரசு, நெய்குப்பை ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேரை கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாஜக மாவட்ட தலைவர் அகோரம், செய்யூர் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், திருச்சி போட்டோகிராபர் பிரபாகரன் ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் ஆகிய 5 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் 8 பேர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அகோரம் மும்பையில் உள்ளதாக கிடைக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்கே ராய்காட் மாவட்டம் அலிபாக் நகரில் உள்ள நாகோன் பீச்சில் வைத்து அகோரமை கைது செய்தனர். தொடர்ந்து அவரை சென்னை அழைத்து வந்து, விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.

Also Read: "அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்றம் கருத்து !