Tamilnadu
ஓட்டுக்கேட்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது? : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சென்னை மாநகரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என்ற பெருமை எனக்கு உண்டு. இத்தகைய 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மாநகரத்தை நவீனமாக்கியதில் பெரும் பங்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.
மெட்ராஸ்க்கு சென்னை என்று பெயர் சூட்டிய முத்தமிழ் கலைஞர்.அப்படிப்பட்ட சென்னையின் மேயராக பணியாற்றிய பெருமை உண்டு சென்னை மாநகரத்தை நவீனமயமாக்கிய பெரும் பங்கு திமுகவுக்கு உண்டு. இன்றைய சென்னைய வலம் வந்து பாருங்க நீங்க பார்க்கிற எல்லா வளர்ச்சி பணிகளுமே திமுக உருவாக்கியதுதான்.
நம்மை பொறுத்தவரை துயர் வரும் நேரம் துணை நிற்பது மட்டுமல்ல துயர் துடைக்கும் திட்டங்களை உருவாக்கி வருகிறோம். சென்னையின் அனைத்துப் பகுதிகளும் ஒரு சேர வளர வேண்டும் என்று நினைக்கும் நாம் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இப்பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, இடப்பற்றாக்குறை, மக்கள் நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த திட்டத்தை வட சென்னை பகுதிக்கு மட்டும் சிறப்பாக உருவாக்கி இருக்கிறோம்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதியன்று அரசின் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்தோம். இந்த திட்டத்தை அறிவித்த போது ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் அமைக்கப்படும் என்று தான் சொன்னோம். ஆனால் இன்று நான்கு மடங்கு தொகையை உயர்த்தி வழங்கி இருக்கிறோம். 4 ஆயிரத்து 181 கோடி மதிப்பில் 11 அரசுத் துறைகளுடன் இணைந்து வட சென்னை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின்திட்டங்களுக்கு 440.62 கோடி ரூபாயும் - இதரதுறைகளின் திட்டங்களுக்கு 886.46 கோடி ரூபாயும் - சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடுசெய்யும். மீதமுள்ள நிதி அந்தந்த துறைகள், வாரியங்கள்மற்றும் நிதிநிலை அறிக்கை ஒதுக்கீடுகள் மூலம் அடுத்தஇரண்டு ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்யப்படும்.
* மாதிரிப்பள்ளிகளை உருவாக்குதல்,
*குறைந்த விலையில்வீட்டுவசதி,
*திறன் மேம்பாட்டு மையங்களைஉருவாக்குதல்,
*புதிய பேருந்து நிலையங்கள் மற்றும்பணிமனைகளை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துதல்ஆகியவை அடங்கும்.
*முக்கியமானபகுதிகளில் துணை மின் நிலையங்களை நிறுவுதல்,
*போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வுமையம் நிறுவுதல்,
*பொது இடங்களில் கண்காணிப்புகேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்களின்பாதுகாப்பை மேம்படுத்துதல்,
*மருத்துவ சுகாதாரநிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள்நலனுக்கான உயர்சிறப்புப் பிரிவு கட்டுதல்,
*குடிநீர்வழங்குதல் ஆகியவைகளும் உருவாக்கப்படும்.
*இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையைஏற்று கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மைஅமைப்புகள்,
*பொதுப் பூங்காக்கள்,
*விளையாட்டுமைதானங்கள், சந்தைகள், டோபி-கானாஎனும் சலவை செய்யுமிடம் மற்றும் டயாலிசிஸ்மையங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும்வடசென்னை முழுவதும் முக்கியமான இடங்களில் நிறுவிமேம்படுத்தப்படும்.
* ரூபாய் 640 கோடி செலவில் கொடுங்கையூரில் உயிரி சுரங்கத்திட்டம் (Bio Mining Project),
*ரூபாய் 238 கோடி செலவில்இரண்டு பெரிய பாலங்கள்,
*ரூபாய் 80 கோடியில்தணிகாசலம் கால்வாய் புனரமைப்புத் திட்டம் போன்றபெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களும் அமைக்கப்படும்.
*ரூபாய் 823 கோடி செலவில் பிராட்வே பேருந்துமுனையமும் மறுகட்டுமானம் செய்யப்படும் என்றும்அறிவித்திருந்தோம். அந்தப் பணிகளும் விரைவாகமேற்கொண்டு உங்களுடைய பயன்பாட்டிற்குகொண்டுவரப்படும்.
கன்னியாகுமரிக்கு சேலத்துக்கு கோவைக்கு வரப் போகிறார் பிரதமர் அவர்கள். எதற்காக வரப் போகிறார்? தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டத்தை உருவாக்கித் தர வரப் போகிறாரா இல்லை!ஓட்டுக் கேட்டு வரப் போகிறார்.
ஓட்டு கேட்டு வருவதை தவறு என நான் சொல்ல வில்லை. சென்னை வெள்ளத்தில் மிதந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர்- தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்தபோதுமக்களைப் பார்க்க வராத பிரதமர் - ஓட்டுக்கேட்டு மட்டும் வருவதற்கு உரிமை இருக்கிறதா? குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அன்றைய தினமே ஹெலிகாப்டரில் போய் பார்த்தார்.
ஒரு ருபாய் வசூல் செய்துவிட்டு, 28 பைசா திருப்பித் தருவது நியாயமா ? முறையா? தருமமா என்பது தாம் நம்முடைய கேள்வி. ஏன் நிதி வழங்க மறுக்கிறீர்கள் என்று கேட்டால், அதை பிரிவினை வாதம் என்கிறார் பிரதமர்.தேசபக்தியை எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது இல்லை. நாட்டுப் பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டியது இல்லை.
* சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது 1962 ஆம் ஆண்டு, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!
* 1971 ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர் அவர்கள்!
* 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப்பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள்!
அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி! அதில் 6 கோடியை வழங்கியது திமுக அரசு!
* அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு கலைஞரின் அரசு!
* 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு முதல்வர் கலைஞரின் அரசு! இந்தியாவைக் காக்க எங்களை நாங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டவர்கள் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.
தமிழ்நாட்டில் கால் பதித்து -இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக குரல் கொடுத்து வருபவர்கள் நாங்கள். இந்தியாவின் தலை சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த நாங்கள் - உலகின் தலைசிறந்த கூட்டாட்சி நாடாக - மக்களாட்சி நாடாக இந்தியா வளர்ந்து வளம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
Also Read
-
மக்களே உஷார்... அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் அதி கனமழை பெய்யும்? - பாலச்சந்திரன் எச்சரிக்கை!
-
கன மழை எதிரொலி : உங்கள் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறையா?
-
கனமழை எச்சரிக்கை : பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR செய்தியாளர்களிடம் பேசியது என்ன?
-
கன மழை எச்சரிக்கை : களத்தில் இறங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
மரணத்திலும் இணை பிரியாத தம்பதி : சோகத்தில் மூழ்கிய கிராமம்!