Tamilnadu

மூட்டை மூட்டையாக போதைப் பொருட்கள் : குஜராத் பதிவு எண் கொண்ட கார் பறிமுதல் - போலிஸ் அதிரடி!

தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலிஸார் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனையை தடுத்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி தமிழ்நாடு முழுவதும் அதிடிர சோதனைகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில், சேலம் மாநகரம் அம்மாபேட்டை காவல் துறையினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலம் - சென்னை தேசிய புறவழிச்சாலை அருகே சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இந்த வாகனத்தின் மீது சந்தேகம் எழுந்ததால் போலிஸார் வாகனத்தின் அருகே சென்றனர். அப்போது காரில் இருந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் வாகனத்தைச் சோதனை செய்தபோது, மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை கைது செய்தனர். சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 440 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து ஆத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த குட்கா பொருட்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தப்பி ஓடிய மேலும் ஒரு வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த கார் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட சொகுசு கார் என்பதால் இந்த கார் யாருடையது, காரில் எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: ”பேச்சில் நாகரிகம் வேண்டும்” : குஷ்புக்கு நடிகை அம்பிகா கடும் கண்டனம்!