Tamilnadu

அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரங்களை மறந்திட முடியுமா? : EPSக்கு நினைவூட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வையும் மதிக்கின்றவன் நான்! உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தையும் காது கொடுத்து கேட்கிறவன் நான்! உங்கள் கோரிக்கைகளை–தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்று உழைக்கின்ற முதலமைச்சர் நான்! அதுனால்தான், “நீங்கள் நலமா?” திட்டத்தை தொடங்கியிருக்கிறேன். இப்படி சிந்தித்து, சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது! வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது! ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது!

அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப “வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது! வந்துவிட்டதா, இல்லையா?

அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது.

மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என்று சொல்லிக்கொண்டார்களே! வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?

இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்குச் செய்தது என்ன?

மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம்! மறந்திட முடியுமா! பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள்! புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள்!

திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள்! ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்!

பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.

அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது! அதுமட்டுமா! முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா!

அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?

தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?

கஞ்சா – குட்கா மாமூல் பட்டியலில், அமைச்சரும், டி.ஜி.பி.யுமே இருந்தார்களே, அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான், இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்தக் கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு வருகிறார்கள். நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை வளமாக்க – தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “பாசிசத்தை வீழ்த்தி, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!