Tamilnadu
“பாசிசத்தை வீழ்த்தி, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு உரை!
கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரூ.1273.51 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 57,325 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “பொலிவு மிகுந்த பொள்ளாச்சி நகரில், கோவை-நீலகிரி–திருப்பூர்-ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற எழுச்சிமிகு விழாவில் மகிழ்ச்சியோடு நான் பங்கேற்க வந்திருக்கிறேன்.
இந்த மாவட்டங்களுக்கெல்லாம் நான் தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிய மன உறுதியோடு, தெம்போடு, துணிவோடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அளித்த வாக்குகளை, பின்னால் இருக்கின்ற நம்பிக்கையை சிந்தாமல், சிதறாமல் பாதுகாத்து வாக்களிக்க தவறியவர்களின் நம்பிக்கையை பெறுகின்ற வகையில், இதுவரை மூன்றாண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமையுடன் உங்களுடைய முகங்களை நான் பார்க்கிறேன். நீங்கள் எல்லாம் மகிழ்ச்சியாக வந்திருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சியை, எழுச்சியை பார்க்கின்றபோது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும், பொது தேர்தலாக இருந்தாலும், எந்த தேர்தல் வந்தாலும் நாம் தான் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.
பொள்ளாச்சி என்றாலே, கவிஞர் மருதகாசி எழுதிய பாட்டுதான் பலருக்கும் ஞாபகம் வரும். அதிலும், இன்றைக்கு இன்ஸ்டாகிராமில் இருக்கின்ற இளைஞர்களிடம் கூட அவருடைய அந்த பாடல் நன்றாக ரீச் ஆகியிருக்கிறது!
“பொதியை ஏற்றி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு, நீயும் வித்து போட்டு பணத்த எண்ணு செல்லக் கண்ணு” என்ற இந்த பாடல் பொள்ளாச்சியோட வர்த்தக பெருமையை சொல்லுகிறது!
அப்படிப்பட்ட இந்த பொள்ளாச்சி அமைந்திருக்கக்கூடிய இந்த கோவை மாவட்டத்துக்கு நான்கு முறை வந்து ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 949 பேருக்கு ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கியிருக்கிறேன்.
இன்று ஐந்தாவது முறையாக வந்திருக்கிறேன். இந்த விழாவை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
அமைச்சர் முத்துசாமி அவர்களை பொறுத்தவரைக்கும், அமைதியாக இருக்கக்கூடியவர்; அடக்கமாக இருக்கக்கூடியவர்; ஆனால், அதே நேரத்தில் ஆற்றல்மிக்க அமைச்சர்! அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார்; ஆனால், களத்தில் சுறுசுறுப்பாக வேலைகளை செய்யக்கூடியவர். அப்படியொரு செயல்வீரர்தான் நம்முடைய அமைச்சர் முத்துசாமி அவர்கள்!
இது என்ன அரசு நிகழ்ச்சியா அல்லது ஒரு மண்டல மாநாடா, என்று எண்ணக்கூடிய அளவிற்கு இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய இந்த நான்கு மாவட்டத்தின் அமைச்சர்களுக்கும், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுக்களை, வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை தலைப்புகளாக முதலில் பட்டியலிட விரும்புகிறேன்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர்க்கு விடியல் பயணம்
புதுமைப்பெண் திட்டம்
காலை உணவுத் திட்டம்
இல்லம் தேடி கல்வி
நான் முதல்வன் திட்டம்
மக்களைத் தேடி மருத்துவம்
இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48
களஆய்வில் முதலமைச்சர் திட்டம்
மக்களுடன் முதல்வர் திட்டம்
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் “நீங்கள் நலமா?” திட்டம்!
நம்முடைய திட்டங்கள் மூலமாக பயனடைந்த ஒவ்வொருவரையும் செல்போனில் அழைத்து, முதலில், நீங்கள் நலமா என்று கேட்கிறேன். பின்னர், திட்டத்தின் பயன் வந்து சேர்ந்ததா என்று கேட்கிறேன். அதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா என்று கேட்கிறேன். கோட்டையிலிருந்து மட்டும் திட்டங்களை அறிவிக்காமல், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களிடமும் பேசுகின்ற முதலமைச்சராக இருக்கக்கூடியவன் நான் தான்! இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். அடக்கத்தோடு சொல்கிறேன். உரிமையோடு சொல்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வையும் மதிக்கின்றவன் நான்! உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தையும் காது கொடுத்து கேட்கிறவன் நான்! உங்கள் கோரிக்கைகளை–தேவைகளை நிறைவேற்றவேண்டும் என்று உழைக்கின்ற முதலமைச்சர் நான்! அதுனால்தான், “நீங்கள் நலமா?” திட்டத்தை தொடங்கியிருக்கிறேன். இப்படி சிந்தித்து, சிந்தித்து மக்களுக்கான முத்திரை திட்டங்களை உருவாக்கியதால் தான் தமிழ்நாட்டினுடைய தொழில்வளம் உயருகிறது! வேலைவாய்ப்பு பெருகுகிறது! பொருளாதாரம் வளருகிறது! ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னேறுகிறது!
அதைப் பார்த்து சிலர் பொறாமைப்பட்டு, தமிழ்நாட்டு மக்களையும், தமிழர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துகின்ற வகையில், பொய்களையும், அவதூறுகளையும் பரப்ப “வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி” நடத்துகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நீங்கள் தக்க பாடம் புகட்டுகிற நேரம் வந்துவிட்டது! வந்துவிட்டதா, இல்லையா?
நம் மண்ணை, நம் தமிழை, நம் பண்பாட்டை, நம் வரலாற்றை, நம் பெருமையை பழிப்பவர்களுக்கு பதில் சொல்கின்ற காலம் வந்துவிட்டது! அதன் அடையாளம்தான், இங்கே நீங்கள் திரண்டு வந்திருக்கின்ற காட்சி! திரளாக வந்திருக்கும் உங்களிடையே கோவை மாவட்டத்துக்கு செய்திருக்கக்கூடிய வளர்ச்சிப் பணிகளை வரிசையாக பட்டியலிட விரும்புகிறேன்.
பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்ட மூன்றாம் கட்டப் பணிகள் நிறைவு,
செம்மொழிப் பூங்கா அமைக்க அடிக்கல்,
சங்கனூர் ஓடை புனரமைப்பு,
உக்கடம், ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு நீட்டிப்புப் பணி,
அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம்,
பொள்ளாச்சி புறவழிச்சாலை, மேற்குப் புறவழிச்சாலை பணிகள்
விளாங்குறிச்சி தகவல் தொழில் நுட்பப் பூங்கா
குறிச்சி தொழிற்பேட்டையில், அடுக்குமாடி ஆயத்தத் தொழில் வளாகம் என்று ஏராளமான திட்டங்களை கோவை மாவட்டத்துக்கு வழங்கியதோடு, இது எல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கின்ற மாதிரி, மதுரை போன்று கோவையில் அறிவியல் மையத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த ஒரு மாபெரும் நூலகமும் அமைக்கவுள்ள அரசுதான், உங்களுடைய அரசு இந்த அரசு!
அடுத்து, ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஈரோடு மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில்
பாதாள சாக்கடைத் திட்டம்,
காலிங்கராயன் வாய்க்கால் புதுப்பிக்கும் பணி
மாவட்ட மத்திய நூலகம் புதுப்பிப்பு,
கிராமப்புறச் சாலைகள்,
ஈரோடு மருத்துவமனைக்கு மாபெரும் கட்டடம்.
வெள்ளோடு கிராமத்தில் 120 அடுக்குமாடி குடியிருப்புகள்
சித்தோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம்
ஜவுளி பூங்கா என்று பல்வேறு திட்டங்கள ஈரோட்டிற்காகச் செய்திருக்கிறோம்.
திருப்பூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால்,
பாதாள சாக்கடை திட்டம்-இணைப்புகள்
843 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள்
நான்கு பாலங்கள்
புதிய பேருந்து நிலையம்
27 பள்ளிகளில் 60 புதிய வகுப்பறைகள் உள்ளிட்ட பணிகள் திருப்பூர் மாவட்டத்தில் செய்திருக்கிறோம்.
நீலகிரி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால்,
யானைப் பாகர்களுக்கும், உதவியாளர்களுக்கும் வீடுகள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு ஓய்வூதியப் பலன்கள்
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு குடியிருப்புகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கு.
நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசிக்குப் பதிலாக இரண்டு கிலோ கேழ்வரகு வழங்குகின்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.
வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீட்டுத்தொகையை
5 இலட்சத்தில் இருந்து 10 இலட்ச ரூபாயாக உயர்த்தியிருக்கோம்.
இப்படி கோவைக்கும், நீலகிரிக்கும், திருப்பூருக்கும், ஈரோட்டுக்கும் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்த ஆட்சிதான் உங்களுடைய திராவிட மாடல் ஆட்சி.
அதுமட்டுமில்லாமல், இந்த 4 மாவட்டங்களில் 560 கோடியே
5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 273 திட்டங்கள் இன்றைய விழாவில், மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.
489 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
223 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 57 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இவற்றின் மொத்த மதிப்பு 1,273 கோடியே 51 லட்சம் ரூபாய்! இதன் தொடர்ச்சியாக, சில புதிய அறிவிப்புகளையும் இந்த விழாவில் மகிழ்ச்சியோடு நான் வெளியிட விரும்புகிறேன்..
முதலில், கோவை மாவட்டத்துக்கான பதிமூன்று அறிவிப்புகள்…
இந்த பொள்ளாச்சி பகுதி தென்னை மரங்கள் நிறைந்து இருக்கின்ற பகுதி. கோடை வெயிலுக்கு குளிர்ச்சியை தருகின்ற பொள்ளாச்சி, இளநீரை விளைவிக்கின்ற வகையில் ஒரு அறிவிப்பை முதலில் நான் வெளியிட விரும்புகிறேன்.
தென்னை மரங்களை அதிகமாக பாதிக்கின்ற நோய் வேர்வாடல் நோய் இருக்கு. அந்த தென்னை வேர்வாடல் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மரங்களை வெட்டி அகற்றுவதற்காக 14 கோடியே 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
இரண்டாவதாக, 3 இலட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
மூன்றவதாக, அகில இந்திய அளவில் தேங்காய் விற்பனை செய்வதற்கான உரிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுத்த தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் செயல்படுகிற 157 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் வெளி மாநில வணிகர்களோடு தொடர்பு ஏற்படுத்தி, வெளிப்படைத் தன்மையோடு வணிகர்கள் மற்றும் வேளாண் பெருமக்கள் நேரடியாக விற்பனையில் கலந்து கொள்வதை ஊக்குவித்து, தென்னை விவசாய பெருமக்களுக்கு நல்ல விலை கிடைக்கவும், வங்கி பரிவர்த்தனை மூலமாக அவர்களுடைய வங்கி கணக்குக்கு உடனடியாக வரவு வைக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.
நான்காவதாக, தென்னை விவசாயின் நலன் கருதி, கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் தேங்காய் நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவு சில்லறை விற்பனை நிலையங்களின் மூலம் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யப்படும்.
ஐந்தாவது அறிவிப்பாக, விலாமரத்தூர் சாலை முதல் அத்திக்கடவு அணை வரை 8.29 கிலோ மீட்டர் நீளத்தில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும்.
ஆறாவதாக, வார்டு எண் 11 மூங்கில் மடை குட்டை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுபாலம் மற்றும் வடிகால் அமைக்கப்படும்.
ஏழாவதாக, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், மாவுத்தம்பதி ஊராட்சிக்குட்பட்ட வாளையார் வனப்பகுதியில் தரைமட்ட குடிநீர்த் தொட்டி கட்டித் தரப்படும்.
எட்டவதாக, காரமடை, ஆனைமலை, சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 4 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டுல சாலை சீரமைக்கப்படும்.
ஒன்பதாவதாக அறிவிப்பாக, இக்கரை பூளுவாம்பட்டி ஊராட்சி, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி, மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் - திவான்சாபுதூர் ஊராட்சி மற்றும் மாவுத்தம்பதி ஆகிய ஊராட்சிகளில் நான்கு பாலங்கள் கட்டப்படும்.
பத்தாவதாக, 15 அங்கன்வாடி மையங்கள் –18 நியாயவிலைக் கடைகள் – 14 சமுதாய நலக் கூடங்கள் – 7 பேரூராட்சிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்படும்.
பதினோறாவது அறிவிப்பாக, கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில மழைநீர் வடிகால் மற்றும் கான்கீரிட் சாலை
10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
பன்னிரண்டாவதாக, உக்கடம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டு வரும் மேம்பாலத்தால் அகற்றப்பட்ட பேருந்துநிலையம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமுறையில் சீரமைக்கப்படும்.
பதிமூன்றாவது அறிவிப்பாக, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஹாக்கி விளையாட்டுத் தரை அமைக்கப்படும்.
அடுத்து, ஈரோடு மாவட்டத்துக்கான ஒன்பது அறிவிப்புகள்
முதலாவதா, சோலார் பகுதியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படும்.
இரண்டாவதாக, வ.உ.சி பூங்கா, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தித் தரப்படும்.
மூன்றாவதாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதியில 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படும்.
நாலாவதாக, புதிய மாவட்ட மைய நூலகம் ஒன்று 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
ஐந்தாவதாக, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சி தாளவாடி ஊராட்சி ஒன்றியம் தலமலை ஆசனூர் ஊராட்சிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கும் இணைப்புச் சாலை வசதி இல்லாத அந்த 9 கிராமங்களுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்தப்படும்.
ஆறாவதாக, 8 சமுதாய நலக்கூடங்கள் கட்டப்படும்.
ஏழாவதாக, சத்தியமங்கலம் நகராட்சியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்படும்.
எட்டாவது அறிவிப்பாக, மஞ்சள் மற்றும் மஞ்சள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் இருப்பு வைத்து வியாபாரம் செய்ய ஏதுவாக குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்பதாவது அறிவிப்பாக, பெருந்துறையில் நொய்யல் ஆற்றின் வடக்கு கரையில் இருக்க கொடுமணல் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ள காட்சிப்படுத்திட ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தொல்லியல் துறையின் மூலம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அடுத்து, திருப்பூர் மாவட்டத்துக்கான ஐந்து அறிவிப்புகள்
முதலாவதாக, பெருமாநல்லூர் சாலையில், நல்லாற்றில், பொம்மநாயக்கன்பாளையம் மற்றும் போயம்பாளையம் சாலை வரை மற்றும் பிச்சம்பாளையம் மெயின் சாலை முதல் ராஜா நகர் வரை
11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலங்கள் கட்டப்படும்.
இரண்டாவதாக, திருப்பூர் மாநகராட்சிக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் அமைக்கப்படும்.
மூன்றாவதாக, கிராமப் பகுதிகளில் 8 புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் 1 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
நான்காவதாக, 13 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
ஐந்தாவதாக, பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக விபத்து மற்றும் எலும்புமுறிவு சிறப்பு மருத்துவமனை 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
அடுத்து, நீலகிரி மாவட்டத்துக்கான நான்கு அறிவிப்புகள்
முதலாவதாக, உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்கா உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்தப்படும். இதற்காக பெரணி இல்லம் புதுப்பித்தல், புதிய சுகாதார வளாகம் அமைத்தல், ஆர்க்கிட் மற்றும் போன்சாய் வளர்ப்புக்கூடம், வடிகால் கால்வாய் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
இரண்டாவதாக, 5 அரசு துணை சுகாதார நிலையங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் செலவில் மொத்தம் 2 கோடியே 50 இலட்சம் ரூபாயில் புதிய கட்டடங்கள் அமைக்கப்படும்.
மூன்றாவதாக, தனியார் கட்டடங்களில் இயங்குகிற 10 நியாயவிலைக் கடைகளுக்கு 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
நான்கவதாக, நீலகிரி மாவட்டத்தில் 2 சமுதாய நலக் கூடங்கள்
1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
இப்படி நான் அறிவிக்கிறேன் என்றால், நான் ஒரு கோப்பில், கையெழுத்துயிடுகிறபோது, இலட்சக்கணக்கான மக்கள் கோடிக்கணக்கான மக்கள் – மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று பொருள்!
அனைத்து மக்களுக்கும் நன்மை அளிக்கும் ஆட்சியாக கழக ஆட்சி செயல்பட்டு வருகிறது. பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் நடந்தது. அவர்களால் இப்படி பட்டியலிட்டுச் சொல்ல முடியுமா?
மேற்கு மண்டலத்தை தங்களுடைய கோட்டை என்று சொல்லிக்கொண்டார்களே! வாக்களித்த மக்களுக்கு அதிமுக ஆட்சி ஏதாவது நன்மை செய்ததா?
இத்தனைக்கும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தார்கள். அவர்கள் இந்த மேற்கு மண்டலத்துக்குச் செய்தது என்ன?
மகள்களை பெற்ற அத்தனை பெற்றோரையும் பதற வைத்தது பொள்ளாச்சி சம்பவம்! மறந்திட முடியுமா! பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்தவர்கள் தைரியமாக அதிமுக ஆட்சியில் வலம் வந்தார்கள்! புகார் கொடுத்தவர்களை மிரட்டினார்கள்!
திமுக மகளிரணி சார்பில்தான், போராட்டம் நடத்தினார்கள். பிறகு, நடவடிக்கை எடுப்போம் என்று ஒரு நாடகம் போட்டார்கள்! ஆனால், சாட்சிகள் மிரட்டப்படுகின்ற வேடிக்கையைப் பார்த்தார்கள்!
பத்திரிக்கையாளர்கள் இதுபற்றி அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டபோது, “அப்படியெதுவும் இல்லை. ஆதாரம் இருந்தால் கொடுங்க" என்று சொன்னார். நான் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது சொன்னேன். இதை நான் சும்மா விடமாட்டேன். நிச்சயமாக, இதற்குரிய நடவடிக்கையை இந்த ஸ்டாலின் உறுதியாக எடுப்பான் என்று அப்போதே நான் உறுதி தந்திருக்கிறேன். இன்றைக்கும் மறந்துவிடவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கும் நிலையில, அந்தப் பெண்ணுடைய பெயரையும், முகவரியையும் வெளிப்படையாக அறிவித்த அக்கறையற்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி.
அந்த வழக்கு சிபிஐ விசாரித்து இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது! அதுமட்டுமா! முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில், கொலை, கொள்ளை, தற்கொலை சம்பவம் நடந்தது இல்லையா!
அமைதி வழியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, போராடியவர்கள் மேல் தாக்குதல் நடத்தியது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் எஸ்.பி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?
தூத்துக்குடியில், 13 பேர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது யாருடைய ஆட்சியில்?
கஞ்சா – குட்கா மாமூல் பட்டியலில், அமைச்சரும், டி.ஜி.பி.யுமே இருந்தார்களே, அது யாருடைய ஆட்சியில்? அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய விடாமல் தடுத்த கூட்டணிதான், இன்றைக்கு உத்தமர் வேஷம் போடுகிறார்கள். இந்தக் கூட்டணி மறுபடியும் மக்களை ஏமாற்றி பிரிந்த மாதிரி நடித்துக்கொண்டு வருகிறார்கள். நாடகம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டு நலனுக்கும், தமிழர்களின் நலனுக்கும் எதிரான அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி ஒருபக்கம் என்றால், தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டை வளமாக்க – தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மற்றொரு பக்கம் ஜனநாயகச் சக்திகளும்-தி.மு.க.வும் ஒற்றுமையாக நிற்கிறோம்!
ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கின்ற ஒன்றிய அரசு அங்கே அமைந்திருந்தால், இன்னும் பத்து மடங்கு சாதனைகளை இந்த திமுக செய்திருக்கும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது!
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர், ’மோடியின் உத்தரவாதம்’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம், டிவி-யில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிரதமர் அவர்களே… மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் கொடுத்த பழைய உத்தரவாதமான ஒவ்வொருவருக்கும்
15 இலட்சம் ரூபாயின் இன்றைய கதி என்ன?
இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உத்தரவாதம் தந்தீர்களே அதன் கதி என்ன? அதை சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!
அதுகூட வேண்டாம், அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. வரப்போகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களை பட்டியலிடுங்கள்! என்ன சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் கேட்கவேண்டும்! ”பதில் சொல்லுங்க பிரதமரே..” என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா!
கடந்த முறை வந்தபோது பேசுகிறார்… பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொண்டு வருகின்ற திட்டங்களை தி.மு.க. தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். பிரதமர் அவர்கள் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாம் சென்று தடுக்கிறோமா!
நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்ட புளுகு ஆகாசப் புளுகுனு சொல்லுவார்கள் – அது மாதிரி, இது மோடி புளுகு! அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்; நாம் தடுப்பதற்கு? எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று சொல்வாரா? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்? மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவர் தடுத்தாரா? இல்லையே.
அடுத்து, உங்கள் நண்பர்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ் அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே! ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழ்நாடின் திரும்பி பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயன்களா?
பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்த பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது!
மாநிலத்தைக் கெடுத்த அதிமுக - மாநிலத்தை கண்டு கொள்ளாத பா.ஜ.க! இந்த கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய, நமது திராவிட மாடல் அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்! தமிழ்நாட்டை உயர்த்துவோம்! இந்தியாவை காப்போம்! ” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!