Tamilnadu
”மோடி 300 நாள் இங்கு வந்தாலும், பாஜகவுக்கு ஒரு சீட்டை கூட கிடைக்காது” - அமைச்சர் ரகுபதி கிண்டல் !
போதைப்பொருள் நடமாட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மிகவும் சுலபமாக இருந்தது. அதற்கு அரசு உடந்தையாக இருந்துள்ளது என்பதற்கான ஆதாரம் சிபிஐ விசாரணை மூலம் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இதை பத்தி பேசுவதற்கு யோக்கியதை கிடையாது என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பொன்முடியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவர் நாளையே அமைச்சராக முடியும். இந்த தீர்ப்பு விமர்சனம் செய்தவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் அந்த தண்டனையை நிறுத்திவைத்து தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கின்றோம். மாற்ற கருத்துகளை விமர்சிக்க முடியாது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொன்முடியின் குடும்பத்தினருக்கும் திமுகவின் தொண்டனுக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பு உள்ளிட்ட அனைத்தும், திமுகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் பயனுள்ள ஒன்றுதான். அடித்தளம் திமுகவுக்கு வலுவாக உள்ளது. அதனை யாரும் பலவீனமாக்க முடியாது. ஆனால் அடித்தளம் இல்லாத அமைப்புகள்தான் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வீண் பலிகளை சுமத்தி, ஏதாச்சும் செய்து மக்களை மாற்ற முடியுமா என்று நினைக்கின்றனர். நாங்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறோம். எந்த பொய் குற்றச்சாட்டும் தமிழ்நாடு மக்களை மாற்றி விட முடியாது. விழிப்புணர்வுடன் தமிழ்நாடு மக்கள் இருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.
ஒரு காலத்தில் 2ஜி-யை சொல்லி எங்களை காலி செய்ய பார்த்தார்கள். அதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு குற்றச்சாட்டை சொல்கின்றனர். தற்போது கூட ஆளுநர் ஒரு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார். இவ்வளவு நாள் அவர் தூக்கத்திலிருந்து தற்போது தான் விழித்துள்ளார்.
இங்கு போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளி மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டிற்கு போதை பொருள் வருகிறது. ஆளுநருக்கு வேண்டிய மோடியும் அமித்ஷாவும் ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்திலிருந்து தான் போதை பொருள் வருகிறது என்பது நாடறிந்த உண்மை. இதை ஒப்புக்கொள்ள ஆளுநருக்கு மனம் இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது.
நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி போதைப் பொருள் தொடர்பாக மனு கொடுத்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக, ஆட்சியில் இருக்கும் பொழுது அவர்களது அமைச்சரவை சகாக்கள் மீது குட்கா வழக்கு குற்றச்சாட்டப்பட்டு, இன்று சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இதையெல்லாம் வைத்துக்கொண்டு திமுக மீது போதை குற்றச்சாட்டு வைத்தால் மக்கள் நம்புவார்களா?
நாங்கள் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அதிமுக, ஆட்சியில் இருந்தபோது தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு துணிவிருந்ததா? அவ்வாறு நடவடிக்கை எடுத்திருந்தால் அதிமுகவே இல்லாமல் போயிருக்கும். அவர் இன்றைக்கு புதிதாக கண்டுபிடித்தது போல போதைப்பொருள் நடமாட்டம் தமிழ்நாட்டில் அதிகரித்து இருக்கிறது என்று கூறியுள்ளார். அவர் ஆட்சியில் இருக்கும் போது போதைப் பொருள் இருப்பதாக சுட்டிக்காட்டி குட்கா பாக்கெட்டுகளை சட்டமன்றத்திலேயே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு சென்று கொடுத்தார்கள்
எவ்வளவு சுலபமாக போதைப்பொருள் நடமாட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தது. அதற்கு அரசு உடந்தையாக இருந்துள்ளது என்பதற்கான ஆதாரம் சிபிஐ விசாரணை மூலம் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு இதை பத்தி பேசுவதற்கு யோக்கியதை கிடையாது. பாஜகவுக்கும் இதைப்பற்றி பேசுவதற்கு யோக்கியதை கிடையாது.
முப்பதாயிரம் கிலோ போதை பொருள் கடத்தலுக்கு முந்த்ரா துறைமுகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக NCB அறிக்கை கூறுகிறது. இவ்வாறு இருக்கும் பொழுது திமுக மீது குற்றச்சாட்டை சுமத்துகின்றனர். திமுகவிற்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற எளிமையான வாய்ப்பு உள்ளது. எனவேதான் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளார். 3 நாள் அல்ல 300 நாள் தமிழ்நாட்டிற்கு மோடி வந்தாலும் ஒரு சீட்டை கூட பாஜக பிடித்து விட முடியாது” என்றார்.
Also Read
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !
-
“மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி” : கள ஆய்வு குறித்து, உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!
-
"ஆரிய அடிமைகளுக்கு வயிற்றெரிச்சல் வர காரணம் இதுதான் காரணம்" - துணை முதலமைச்சர் உதயநிதி கூறியது என்ன ?
-
மருத்துவ துறையில் 100 % காலியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !
-
கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஏன் ? - நடிகை ஜோதிகா கேள்வி !