Tamilnadu
“மதுரை AIIMS போல சின்னப்பிள்ளைக்கும் வீடு வழங்காத ஒன்றிய அரசு...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே உள்ள பில்லுசேரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை. விவசாய கூலித் தொழிலாளியான இவர், பெண்கள், சுய உதவிக்குழுவில் இணைவதற்காக பாடுபட்டார். நில உரிமையாளர்களைச் சந்தித்து விவசாய வேலையைக் குத்தகைக்கு எடுத்து, அதற்கு கூலியாட்களை திரட்டி அனைத்து பணிகளையும் செய்து, அதில் வரும் மொத்தக்கூலியை அனைவருக்கும் சமமாகப் பங்கிட்டு வழங்கினார்.
இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக பாடுபட்டார். பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார். இவரது சேவையை பாராட்டி, இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்தது.
மிகவும் உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும் 2000-ம் ஆண்டு பெற்றார். அப்போது இவரது காலில் பிரதமர் வாஜ்பாய் விழுந்து வணங்கியது இந்திய ஊடகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இவரது வீட்டுக்கு வந்த சிலர், பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதுகுறித்து எதுவும் தெரியவரவில்லை. எனவே இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ந்த வீடியோவில், “நான் பாட்டுக்கு வீட்டுல இருந்தேன். திடீரென்று நாலு பேர் வந்து சால்வை போர்த்தினாங்க. மோடியோட ‘அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ இருக்கு. அதுல வீடு கட்டி தர்றோம்னு சொன்னாங்க. பட்டா கொடுத்தாங்க. ஆனா ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இதுவரை வீடு கட்டித் தரலை. என்னாலையும் எதுவும் செய்ய முடியல” என கண்ணீர் மல்க கூறியிருந்தார்.
எனவே, சின்னப்பிள்ளைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு வீடு கட்டும் பணிகள் இந்த மாதமே தொடங்கப்படவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது தற்போது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்ததோடு, சின்னப்பிள்ளைக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவில், “இந்திய ஒன்றியத்திலேயே முதன் முறையாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடங்கிய மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து, கிராமப்புற மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்காக தன்னையே அர்ப்பணித்த மதுரை சின்னப்பிள்ளை அவர்களுக்கு, வீடு வழங்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு தரப்பில் வாக்குறுதி தரப்பட்டது.
மதுரைக்கு எய்ம்ஸ் வராதது போல, சின்னப்பிள்ளைக்கு ஒன்றிய அரசின் வீடும் வரவில்லை. 2 ஆண்டு கால காத்திருப்புக்குப் பின், இதுகுறித்த வேதனையை சின்னப்பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார். இதையறிந்த நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சின்னப்பிள்ளை அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிய வீடும், 380 சதுர அடி நிலத்திற்கான பட்டாவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
'மகளிர் மேம்பாடு' எனும் கலைஞர் அவர்களின் கனவை நனவாக்க உழைத்த சின்னப்பிள்ளைக்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கிடைக்கவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு என் அன்பும், வாழ்த்தும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!