Tamilnadu

“பாஜகவினருக்கு ஏழைகளைப் பிடிக்காது; பணக்காரர்களை மட்டுமே பிடிக்கும்” : நடிகர் போஸ் வெங்கட் அனல் பேச்சு !

சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே உள்ள அப்பாவு நகர், சாஸ்திரி தெருவில் சென்னை தெற்கு மாவட்ட சைதை கிழக்குப் பகுதி திமுக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு, 571 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்வும் நடைபெற்றது.

சைதை கிழக்குப் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜா சம்பத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “நமது தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறார். குறிப்பாக நமது தமிழ்நாட்டு முதலமைச்சர் மகளிர் தினம் வாழ்த்து என்று கூறிய பொழுது, அவர் மகளிருக்காக கொண்டு வந்துள்ள அனைத்து திட்டத்தையும் பட்டியலிட்டு காட்டியுள்ளார். குறிப்பாக நகரப் பகுதியில் உள்ள ஏழை - எளிய மகளிர்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயணம் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்.

இந்தத் திட்டத்திற்காக, போக்குவரத்து கழகத்திற்கு 2500 கோடி மானியமாக முதலமைச்சர் வழங்கினார். நகரப் பேருந்துகளில் பயணம் மட்டுமே இலவசமாக இருந்த நிலையில், மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மகளிர்களும் இலவச பயணத்திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் காரணமாக, 2500 கோடி ரூபாய் மானியத்தை 3500 கோடி ரூபாய் உயர்த்தி வழங்கி உள்ளார் முதலமைச்சர். மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும் திட்டம் அறிமுகப்படுத்தும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு கோடி ரூபாய் பயனாளிகள் பயன் பெறுவார்கள் என்று அறிவித்தார். ஆனால் இன்று ஒரு கோடியை தாண்டி செல்கிறது.

கிண்டி பண்ணோக்கு மருத்துவமனையில் உள்ள அதிநவீன வசதி இந்தியாவில் வேற எந்த மருத்துவமனையிலும் இல்லை. அதேபோல் இந்தியாவிலேயே முதன்முதலாக வயது முதிர்ந்தவர்களுக்கான மருத்துவமனை இங்கு கட்டப்பட்டு திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல 25 கோடி ரூபாய் செலவில் 200 படுக்கை அறைகள் கொண்ட மருத்துவமனை இன்னும் கூடிய விரைவில் கட்டும் நடைபெற்று வருகிறது. ரூபாய் 621 கோடி ரூபாய் செலவில் தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரையில் பாலம் கட்டும் பணி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அடையாறு ஆற்றங்கரையை தூய்மைப்படுத்தி செழுமையாக மாற்ற 1500 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தும் பணிக்காக முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சைதாப்பேட்டை பகுதியில் 20 கோடி ரூபாய் செலவில், காய்கறி மார்க்கெட்டை புதிய நவீன மார்க்கெட்டாக மாற்றி தருவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வருகின்ற தேர்தலில், திமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும். எதிர்த்து போட்டியிடக் கூடிய அனைவரும் தங்களது கட்டுத்தொகையினை இழப்பார்கள். இந்த தேர்தலில் திமுக ஒரு மாபெரும் சாதனையை படைக்கும்.

பின்னர் நடிகர் போஸ் வெங்கட் பேசுகளையில், “ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. சோவியத் ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின் மறைவிற்குப் பிறகு நமது தலைவர் பிறந்த பொழுது முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு புரட்சியாளர் பெயரை வைத்தார். அன்று முத்தமிழறிஞர் கணித்ததன் விளைவு, இன்றைய நமது முதல்வர். அவர் நமக்கான முதல்வராக உள்ளார் என்பதை விட அவர் நமக்கான போராளியாக இந்தியாவில் உள்ளார் என்பதை முக்கியமான விஷயம்.

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னர்கள் என அனைவரும் வாரிசுகள் தான். தந்தை பெரியாரின் கனவுகள், பேரறிஞர் அண்ணாவின் கனவுகள், முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுகள் அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் அதனை நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர் நமது தமிழ்நாடு முதல்வர் தான். அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் வருவார். அவரும் ஆள்வார் என்பதை அனைவரும் நெஞ்சை தட்டி சொல்லுங்கள்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட வராத பிரதமர் மோடி தற்பொழுது வருவதற்கான காரணம் என்ன?. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும் தமிழ்நாட்டை உற்று நோக்குகின்றனர். பிள்ளைகள் படித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி பெறும் என்கின்ற நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற தமிழ்நாடு இதனை பிற மாநிலத்து முதல்வர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு செயலாற்றிய பொழுது, இதனை தடுக்கும் விதத்தில் ஒன்றிய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. தேர்தல் நெருக்கம் தருவாயில் மட்டும்தான் பிரதமர் ஓட்டுக்காக தமிழ்நாட்டிற்கு வருகிறாரா?. அம்பானி அதானி போன்றவர்கள் மட்டுமே மோடியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். மாறாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காகவும், விமான நிலையத்திற்காகவும் காத்திருக்கக்கூடிய மக்களை அவர்களது குடும்பமாக அவர்கள் கருதவில்லை.

பாஜகவினருக்கு ஏழைகளைப் பிடிக்காது; பணக்காரர்களை மட்டுமே பிடிக்கும். அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்கிறார் அதற்கு முன்னதாக பல நடை பயணங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. நடைபயணத்தின் நோக்கம் என்பது அப்பகுதியில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் என்ன பிரச்சனைகள் குறித்து தெரிவிக்கிறார்களோ அது அறிந்து கொள்வதற்காகவே நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மாறாக பாஜக பொருத்தவரையில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் எவ்வளவு என்பதை கணக்கெடுப்பதற்காக மட்டுமே சென்றார்கள்.

மேலும் அந்த நடை பயணத்தின் பொழுது முடிவுக்கு பிரதமர் வருகிறார்கள். கடைசியில் இருவரும் மாறி மாறி பாராட்டி மட்டுமே கொண்டார்கள். மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சி பாஜக அல்ல என்பதை பொதுமக்கள் நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய தேவைகளாக உள்ள பெட்ரோல் சமையல் எரிவாயு ஆகியவற்றை கடும் விலை உயர்வை செய்துள்ளது ஒன்றிய அரசு தான். ஒட்டுமொட்டு இந்தியாவையும் பிற நாடுகள் சிரிக்கும் நோக்கினை உருவாக்கி விட்டு வல்லரசாகும் என பொய் உரைக்கும் கூடிய கட்சிதான் பாஜக.

திமுக அழிந்துவிடும் எனக் கூறிய அனைவருமே மறித்து விட்டார்கள். தனது தொடக்க காலத்திலேயே இந்துத்துவ அமைப்பு என்ற ஒன்றினை ஆரம்பித்து மக்கள் மத்தியிலே பெரும் கலவரங்களை ஏற்படுத்திய நபர் தான் இன்று உத்தரப்பிரதேச மாநில முதல்வராக உள்ளார். மாபெரும் ஊழல் கட்சியை சேர்ந்தவர்கள் வாக்கு கேட்டு உங்கள் வீட்டிற்கு வருவார்கள். குறிப்பாக அவர்கள் தங்கள் குறைகளை கேட்கிறோம் என்கின்ற பேரில் அலைபேசி மூலமாக மட்டுமே வருவார்கள் நேரில் இது போன்ற பொதுக்கூட்டம் நடத்த மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை நாற்பதற்கும் 40 என்கின்ற விதத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.

Also Read: “போதை மருந்து விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிய முதலமைச்சர்”: பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி!