Tamilnadu

AIIMS விவகாரம் : “குழந்தைத்தனமான காரணங்களை சொல்லக்கூடாது” - அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சு பதிலடி !

AIIMS மருத்துவமனை கட்ட தாமதிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசை காரணம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. குழந்தைத்தனமான காரணங்களை சொல்வதை விட்டுவிட்டு ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 43,051 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “இன்று தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது‌‌. இன்று ஒரே‌ நாளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. தாய்-சேய் திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 6 நோய்களை தடுக்க விரிவுப்படுத்த தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது.

ஆண்டுதோறும் 10 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதுவரை‌ 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசியால் பயனடைந்துள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், நடமாடும் வாகனம் உள்ளிட்டவை மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

டெல்டாவில் ரூ.254.80 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கை வசதி கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையை நாகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகூர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஆவடி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புதிய மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

2019-ம் ஆண்டு பிரதமரால் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்றளவும் ஒற்றை செங்கலோடு நின்று கொண்டிருக்கிறது‌. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மரங்கள் இடையூறாக உள்ளது என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

மதுரை AIIMS மருத்துவமனைக்கு சரியான இடம், முறையாக மரங்கள் அகற்றப்படவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். சுற்றுச்சுவர் அமைத்தது ஒன்றிய அரசுதான். மரங்களை அகற்றாமல்தான் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. நிலம் கையகப்படுத்தாமல் எப்படி கடந்த 2019-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் அவர்களை அழைத்து வந்து அடிக்கல் நாட்ட வைத்தார்? நிலம் கையகப்படுத்தாத இடத்தில் எப்படி பிரதமர் அடிக்கல் நாட்டினர்? அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை மிஸ் யூஸ் செய்தாரா?

AIIMS மருத்துவமனை கட்ட தாமதிக்கும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசை காரணம் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. குழந்தைத்தனமான காரணங்களை சொல்வதை விட்டுவிட்டு ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட வேண்டும். ஜப்பான் நிறுவனத்துடன் பேசி விரைந்து 85 சதவீதம் நிதியை பெற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தீவிர படுத்த வேண்டும். இல்லை என்றால், ஒன்றிய அரசு முழுமையான நிதியை ஒதுக்கி எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Also Read: போலியோ சொட்டு மருந்து : “நலமான குழந்தைகளே எதிர்காலத்திற்கான ஒளி” - பெற்றோர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்!