Tamilnadu
“இதுதான் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்” : ஒன்றிய நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் !
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.02.2024) தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: “நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, மாவட்டந்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற கூட்டங்களில் பங்கெடுத்து இலட்சக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நான் வழங்கிக் கொண்டு வருகிறேன்.
2024-ஆம் ஆண்டின், முதல் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியை தென் மாவட்டங்களான இந்த தூத்துக்குடி – திருநெல்வேலியில் இருந்து தொடங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால், இது என்னுடைய அருமைத் தங்கை கனிமொழி அவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த மாவட்டம்!
நாடாளுமன்றத்தில், ‘கர்ஜனை மொழியாக’ செயல்பட்டு தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பவர் மட்டுமில்லை, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் குரல் கொடுப்பவர் அவர்! தூத்துக்குடியில், மழை வெள்ளப் பாதிப்பு என்று தெரிந்ததும், உடனே இங்கே ஓடோடி வந்து மக்களை காப்பாற்றியதை பார்த்தோம்.
தங்கை கனிமொழி அவர்களை போலவே, தூத்துக்குடி மாவட்டத்தின் பெண் சிங்கமாக விளங்கும் கீதா ஜீவன் அவர்களும், அமைச்சராகவும், செயல் வீரராகவும் இருக்கக்கூடிய அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும் மக்களோடு மக்களாக இருந்து மக்களை காப்பாற்றினார்கள்.
அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட பல அமைச்சர்களையும் இங்கே அனுப்பி வைத்தேன். நானும் இங்கே உடனடியாக வந்தது மட்டுமல்ல, இந்த மீட்பு பணிகள் முடியும்வரை அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும், தங்கை கனிமொழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து தொலைபேசியில் தேவையான அனைத்து நிவாரணப் பணிகளை உத்தரவிட்டுக் கொண்டு அந்தப் பணிகளை கண்காணித்துக் கொண்டிருந்தேன்.
நெல்லை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு அவர்களும் இங்கேயே இருந்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் இரண்டு வாரங்கள் தங்கி, உடைந்து போயிருந்த பாலத்தை எல்லாம் சரி செய்துவிட்டுதான் திரும்பினார்.
அமைச்சர் உதயநிதி அவர்களும் ஒருவார காலம் இங்கேயே பணியாற்றினார். இப்படி உடனே மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளால்தான் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அடிப்படை வசதிகள் விரைவாக சரி செய்யப்பட்டது! பாதிக்கப்பட்ட மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 66 கோடியே 45 இலட்ச ரூபாய் மதிப்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும், இந்த உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய 145 கோடியே 58 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும், 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக உடனடியாக சரி செய்யப்பட்டது.
நிரந்தரமாக சரிசெய்ய 15 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையெல்லாம் எதற்காக நான் சொல்கிறேன் என்றால், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள்!
நலத் திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும்.
அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களில் இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்போதுகூட இங்கே இருக்கக்கூடிய சில்லானத்தம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் வின்ஃபாஸ்ட் என்ற மிகப் பெரிய கார் உற்பத்தி செய்கின்ற நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இந்த கம்பெனி தூத்துக்குடியில் மொத்தம் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது.
அதுமட்டுமல்ல, திருநெல்வேலியில் இருக்கின்ற கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் டாட்டா பவர் நிறுவனம் 2800 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிட்ட சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் 36,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், மலேசியாவுடன் பெரிய தொழில் நிறுவனமான பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் 30,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க இருக்கிறார்கள்.
இந்தத் தொழிற்சாலைகளுக்கான பணிகள் விரைவில் துவங்கயிருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகள் அமையும்போது, இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
கொரோனா பெருந்தொற்று வந்தபோது, தி.மு.க. ஆட்சியில் இல்லை. ஆனால், ‘ஒன்றிணைவோம் வா’ என்று வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா பொருட்களையும் வாங்கித் தந்தோம். பல ஊர்களில் உணவுக் கூடங்கள் வைத்து, உணவு வழங்கினோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதும், கொரோனா அலை இருந்தது. அப்போது குடும்ப அட்டைதாரர்கள் எல்லோருக்கும் 4 ஆயிரம் ரூபாய் வழங்கினோம். இதுதான் தி.மு.க.-வின் ஆட்சி!
கொரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. சும்மா பாதிக்கப்படும்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்கள் இல்லை நாங்கள்! இறுதி வரைக்கும் உங்களுடன் இருந்து துயரங்களை துடைப்பதின் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
சில புள்ளிவிவரங்களை மட்டும் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்…
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் உயிரிழந்த 58 நபர்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது.
வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு, மாடு, கோழிகளின் உரிமையாளர்களுக்கு, 34 கோடியே 74 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக பாதிப்படைந்தவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 382 கோடியே 25 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 35 கோடியே 92 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்படைந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 9 கோடியே 35 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல்,
வீடுகள பழுது பார்ப்பது,
பயிர் சேத நிவாரணம்
சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடன் திட்டம்
தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம்
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன்
மீன் பிடி படகுகளுக்கான நிவாரணம்
கால்நடைகள் வாங்குவதற்கு கடன் உதவி,
உப்பளத் தொழிலாளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை
பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன்.
இந்த அறிவிப்பின்படி, உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்போது நிவாரண உதவித்தொகை மற்றும் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 456 பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
முழுமையாக சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த வீடுகளில் பழுது நீக்கம் செய்வதற்கு 2 இலட்சம் ரூபாய் வரையிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 4 ஆயிரத்து 624 குடும்பங்கள் பயனடைவார்கள்.
கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய கால்நடைகள் வாங்குவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும், தனிநபர் கடன் உதவி வழங்கவும் ஆணையிட்டிருக்கிறோம்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 343 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டு வருகிறது.
இதுவரை உழவர்களுக்கு பயிர்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், சிறு வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வணிகக் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகக் கடன், முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகர் கடன், பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு, பயிர் சேதங்களுக்கு நிவாரணம், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம், சேதமடைந்த மீன்பிடி விசைப் படகுகள், நாட்டு படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு நிவாரணத் தொகை என பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு 666 கோடியே 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவையும் வழங்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருக்கின்ற சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கும் பொருட்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடன் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்தபடி, 6 விழுக்காடு சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில், இந்த இரண்டு மாவட்டத்திலும், 670 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 18 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால், இந்த மாவட்டங்களைச் சார்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில் செய்வோர் பயனடைந்து இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதுதான் முக்கியம். ஒன்றிய அரசு ஒரூ ரூபாய்கூட கொடுக்காதபோதும், இது யார் கொடுத்தது என்றால், இந்த ஸ்டாலின் உங்களுக்காக கொடுத்தது! இந்த அரசு உங்களுக்காக கொடுத்தது.
இந்த அளவுக்கு அளப்பரிய நலத் திட்டங்களை நம்முடைய அரசு வழங்கியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகள் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும்,
விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்" அமைக்கப்படும்.
கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "கோவில்பட்டி கடலை மிட்டாய் என்பதை பருப்புமிட்டாய் என்று மாற்றி கூறலாம்.குறுங்குழுமம்" அமைக்கப்படும்.
இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
இவையெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்றால், திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும்,
அம்பாசமுத்திரத்திற்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும்.
அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது.
விரைவில் இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உங்களுக்கு மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது எல்லாமே தமிழ்நாடு அரசின் மாநில நிதியில் இருந்து செய்து தரப்படுகிறது.
இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம்.
ஒன்றிய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழ்நாட்டு மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் ஒன்றிய அரசும், உள்ளீடு: நிதியமைச்சரும்பாராமுகமாக இருக்கிறார்கள்!
நாம் இதை கேட்டால் என்ன சொல்கிறார்கள்? 'உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே' என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல!
எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். என்ன காரணம்? எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துத்தானே வருகிறார்கள்!
தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்தானே!?
ஒன்றிய பா.ஜ.க. அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!
உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சிதான், தி.மு.க. ஆட்சி! உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்…இருப்பேன்…இருப்பேன்…” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!