Tamilnadu
“இரக்கமற்ற வகையில் விவசாயிகளை வேட்டையாடும் ஒன்றிய பாஜக அரசு” : முரசொலி கடும் கண்டனம்!
வேட்டையாடப்படும் விவசாயிகள்
அமைதியாகப் போராடும் விவசாயிகள், இரக்கமற்ற வகையில் வேட்டையாடப்படுகிறார்கள். விவசாயிகள் போராட்டம் தொடங்கி 11 நாட்கள் ஆகிறது. கடந்த 21ஆம் தேதி அன்று சுப்கரன் சிங் என்ற விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 21 வயதே ஆனவர் அவர். பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம், பலோக் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர்.
பஞ்சாப் -– -அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாம் இட்டிருந்த விவசாயிகள், டெல்லியை நோக்கிச் செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றார்கள். அப்போது விவசாயிகளைத் தாக்கியது காவல் துறை. அதில் மூன்று விவசாயிகள் பலத்த காயம் அடைந்தார்கள். பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் சுப்கரன் சிங் மரணம் அடைந்தார்.
சுப்கரன் சிங் மரணத்தைத் தொடர்ந்து பிப்ரவரி 23ஆம் நாளை ‘கறுப்புநாள்’ என்று அறிவித்துள்ளார்கள் விவசாயிகள். பிப்ரவரி 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்தப்பட உள்ளது. மார்ச் 14 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில், ‘மகா பஞ்சாயத்து’ நடத்த இருக்கிறார்கள்.
இந்த முறை சன்யுக்த் கிசான் மோர்ச்சா (அரசியல் சாராதது), பிகேயு (ஷாஹீத் பகத் சிங்), பிகேயு (ஏக்தா சித்துபூர்), கிசான் மஸ்தூர் மோர்ச்சா, பாரதிய கிசான் நௌஜவான் யூனியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த முறை நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது பா.ஜ.க. அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் இவர்கள் கேட்கிறார்கள்.
அப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பதாக அரசு உறுதியளித்தது. போராட்டத்தின்போது விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் கூறியது. லக்கிம் – பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இதே கோரிக்கைகளைத் தான் இப்போதும் விவசாயிகள் வைக்கிறார்கள்.
எம்.எஸ். சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்பது மிகப்பெரிய வாக்குறுதி. அதை மதிக்கவே இல்லை பா.ஜ.க. அரசு. கொடுத்த வாக்குறுதிகளை பா.ஜ.க. அரசு நிறைவேற்றும் என்று 13 மாதங்கள் காத்திருந்தார்கள் விவசாயிகள். ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. மீண்டும் போராட்டப் பாதையைக் கையில் எடுத்து விட்டார்கள்.
விவசாயிகள் டெல்லிக்குள் வந்து போராடுவதைத் தடுக்க கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இரும்புத் தடுப்புகளை வைத்துள்ளார்கள். கம்பிவலைகள் போட்டுள்ளார்கள். ஆணிப் படுக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையில் வாகனம் போக முடியாத வகையில் சாலையை உடைத்தும் வைத்துள்ளார்கள். எதிரி நாட்டு எல்லைகளை விட தலைநகர் டெல்லியில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகள் மிக மோசமானதாக அமைந்துள்ளது.
அனுமதியின்றி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டால் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று அரியானா காவல் துறை, விவசாய சங்கத் தலைவர்களின் வீடுகளில் அச்சிட்டு ஒட்டி வைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளார்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள். பஞ்சாப், அரியானா மாநில வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளார்கள்.
ஒன்றிய அரசின் உத்தரவைத் தொடர்ந்து போராட்டச் செய்திகளைப் பதிவிட்ட 177 விவசாயிகளின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள் பலரது கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ‘எக்ஸ்’ இணையத் தளமானது, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை நீக்கியதை ஒப்புக் கொண்டுள்ளது. ஒன்றிய அரசு அவர்களுக்கு சில நிர்வாக உத்தரவுகளை அனுப்பிய பின்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
சமூக ஆர்வலர் ஹன்ஸ்ராஜ் மீனாவின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. “எனது ட்ரைபல் ஆர்மி (Tribal Army) அமைப்பின் சமூக ஊடகக் கணக்கு இந்தியாவில் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. எனது பதிவுகள் எந்த வகையிலும் சட்டத்தை மீறவில்லை. நான் இப்போதுதான் எனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளேன். அரசாங்கமும் புதிய யோசனைகளுக்கு அஞ்சுகிறது.
எங்களின் குரல் மக்களைச் சென்றடைவதை அரசாங்கம் விரும்பவில்லை, எனவே எந்த உறுதியான காரணமும் இல்லாமல் எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டன,” என்று அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். இவரது, ‘ட்ரைபல் ஆர்மி’ அமைப்பு இந்தியாவில் உள்ள பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்புகிறது.
விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து எழுதிவரும் பத்திரிகையாளர் மந்தீப் புனியாவின் தனிப்பட்ட கணக்குகள் மற்றும் அவரது செய்தி இணையத்தளமான காவ்ன் சவேராவின் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. “நாங்கள் விவசாயிகளின் போராட்டக் களத்தில் இருந்து செய்திகளை அளித்தோம், எங்கள் குரலை ஒடுக்க எங்கள் கணக்குகள் முடக்கப்பட்டன” என்று அவரும் சொல்லி இருக்கிறார். பத்திரிக்கையாளர் மந்தீப் புனியா, போராட்டம் குறித்த அதிகமான செய்திகளை வெளியிட்டு வந்தார். அவரது இணையத் தளத்தையும் முடக்கிவிட்டார்கள். பஞ்சாபின் சுதந்திரப் பத்திரிகையாளர் சந்தீப் சிங்கின் ‘ட்விட்டர்’ கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களை முடக்கிவிட்டு விவசாயிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க. அரசு.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!